வையகம் சிறக்கவாழ்வோம்!

வள்ளுவன் குறளை வாழ்வில்
வாய்மொழி என்று கொண்டே
தௌளிய முறையில் வாழ்ந்தால்
தொல்லை ஏதும் இல்லை
உள்ளுவ தோறும் நல்ல
ஊக்கமே வழங்கு கின்ற
வள்ளுவம் போற்றி வாழ்வோம்!
வையகம் சிறக்க வாழ்வோம்!!
எல்லாம் இதனுள் கண்டே
ஏற்றம் கொண்டே வாழ்வோம்!
நல்லாரே நாளும் நாளும்;
நாவினால் சொல்லல் மட்டும்
நல்லதா? நமது வாழ்வில்
நாளும் கடைப்பி டித்தால்
நல்லதே சூழும்! நாமும்
நானிலம் போற்ற வாழ்வோம்!
நல்லதே குறளாம்! நம்மின்
நன்னெறி குறளாம்! எங்கும்
வல்லதே குறளாம்! வாழ்வில்
வெல்வதே குறளாம்! வையம்
கொள்வதே குறளாம்! அதனால்
குணமே ஓங்கும்! குவலயம்
எள்வதைத் தள்ளி என்றும்
ஏற்றமே பெற்று வாழ்வோம்!
(பாவடிவம்)
புலவர்
குறளேந்தி