ஏழை யென்றே
சொல்லிக்கொண்
டெதையும் செய்யா
திருந்துகொண்டு
கூழை கும்பிடு போட்டு நின்றால்
கூனிக் குறுகியே
வீழ்ந்திடுவாய்!
உழவே ஓங்க
முயன்றிடுவாய்!
ஊக்கங் கொண்டே
ஒன்றிடுவாய்!!
இழப்பை நீக்கிச் சென்றிடுவாய்!
இனிதே முடிவில்
வென்றிடுவாய்!!
விளைவை மேலும்
பெருக்கிடுவாய்!
வேதனை முழுதும்
நீக்கிடுவாய்!!
களைப்பைப் போக்கி ஆர்த்திடுவாய்!
கருத்தாய்ச் சேர்த்தே
காத்திடுவாய்!!
தொழிலை நாடித்
தேடிடுவாய்!
தொடர்ந்து வாகைச்
சூடிடுவாய்!!
அழியும் சுற்றம் காத்திடுவாய்!
ஆளுமை எங்கும்
சேர்த்திடுவாய்!!
தாழை போல
மணப்பதற்கே
தக்க தொழிலைத்
தேர்ந்திடுவாய்!
வாழை போல தழைத்தோங்கி
வாழ்வில் நாளும்
உயர்ந்திடுவாய்!
கல்லை மண்ணை
வணங்குவதால்
கல்விப் பயிர்தான் வளராதே
கல்வி தன்னைக் கைக்கொண்டே
கருத்தாய்க் கற்றே
வளர்ந்திடுவாய்!
ஆங்கிலம் மோகம்
தகர்த்த்திடுவாய்!
ஆடிமை வாழ்வை
ஒழித்திடுவாய்!!
தேங்கிடும் அழுக்கை அகற்றிடுவாய்!
தேனாம் தமிழைப்
போற்றிடுவாய்!!
சாதி மதத்தின்
பேதத்தைச்
சாடி ஒதுக்கிச் சென்றிடுவாய்!
நீதி நேர்மை நாதங்களை
நெடிதே எண்ணி வென்றிடுவாய்!
ஊழ்தான் வலிமை
என்றேதான்
ஊக்கங் குறைந்தே போகாதே!
பாழாம் ழூடப் பழக்கத்தால்
பாழாய் வாழ்வை இழக்காதே!
வாழும்
வள்ளுவம் கைக்கொள்வாய்!
வாழ்வை நெறியால் நிலை
கொள்வாய்!!
தாழும்
நிலையைத் தகர்த்திடுவாய்!
தக்க வாறே உயர்ந்திடுவாய்!!
எம்மொழி
செம்மொழி என்றிடுவாய்!
என்றும் அதன்வழி
நி;ன்றிடுவாய்!!
நம்முடைப் பண்பைக் காட்டிடுவாய்!
நயமாய்ச் சிறார்க்கே
ஊட்டிடுவாய்!!
அறிவியல்
துறையினை நாடிவருவாய்!
ஆய்வில் சிறப்பைத்
தேடிடுவாய்!!
நெறிகள் தன்னில் கூடிடுவாய்!
நெஞ்சம் கொண்டே பாடிடுவாய்!!
கடனை வாங்கிக்
கலங்காமல்
கண்ட படியே களிக்காமல்
உடனே மனதை நிலைநிறுத்தி
ஒழுக்கம் பேணி
உயர்ந்திடுவாய்!
சிக்கனம்
வாழ்வில் கண்டிடுவாய்!
சேமிப்பை நாளும்
கொண்டிடுவாய்!!
துக்கமில் லாமல் வாழ்ந்திடுவாய்!
தூய இன்பினில்
ஆழ்ந்திடுவாய்!!
அன்பை அருளைக்
கூட்டிடுவாய்!
ஆளுமை மேலும் காட்டிடுவாய்!!
துன்பம் எங்கும் ஓட்டிடுவாய்!
தொடர்ந்தே வெற்றி
ஈட்டிடுவாய்!!