2. இளமைதனில் கல்லாத
இளஞைனையே காணும்போ(து)
இன்பமே!நல் அன்பே!யென
கொஞ்சிடவாப் பிறந்தோம்?
வளருகின்ற கல்வியையே வளர்த்திடாத
மாந்தரைத்தான்
வள்ளளெனும் பேர்சொல்லி
வணங்கிடவாப் பிறந்தோம்?
துளிர்க்கின்ற தாவரத்தின் தோற்றத்தினை
அறிந்துகொண்டு
துய்க்கின்ற செயலைத்தான்
செய்திடவே பிறந்தோம்!
களர்நிலமும் செழிப்பதற்கும்
காய்கனிகள் கொழிப்பதற்கும்
கல்வியெனும் பயிரைத்தான்
காத்திடவே பிறந்தோம்!!
3. கொள்ளையராய் இலாபத்தைக் கொழிப்பதிலே
குறியாகக்
கொள்ளுகின்ற வாணிகரைக்
கொஞ்சிடவாப் பிறந்தோம்?
கள்ளத்தனம் செய்கின்ற குள்ளநரிக்
குணத்தோடே
கலப்படங்கள் செய்வோரைக்
காண்பதற்காப் பிறந்தோம்?
உள்ளதையே உரைக்கின்ற உண்மையான
வாணிகர்தம்
ஊக்கத்தையே போற்றிநாம்
உயர்த்திடவே பிறந்தோம்!
அள்ளுகின்ற அன்பாலே அனைவரோடும்
பழகுகின்ற
அன்பர்களை உருவாக்கும்
அரும்பணிக்கே பிறந்தோம்!!
4. பாட்டெழுதும் பாவலர்கள் பண்பாட்டை
மாற்றிமாற்றி
பாட்டினிலே கொள்வதைத்தான்
கேட்டிடவாப் பிறந்தோம்?
ஏட்டினிலே வெளியாகும் எள்ளுகின்ற
கதைகளையும்
ஏற்றமில்லாக் கருத்தினையும்
ஏற்றிடவாப் பிறந்தோம்?
நாட்டுகின்ற நற்பொருளால் நன்மைகளே
உருவாக்கி
நல்வழியில் நாடெல்லாம்
நடத்துதற்கே பிறந்தோம்!
கூட்டுகின்ற கதைப்பாட்டு குறைவிலாது
நின்றெங்கும்
கூடுதற்கே வழிகாட்டும்
கொள்கைக்கே பிறந்தோம்!!
5. கையூட்டில் பிழைக்கின்ற காதகர்கள்
தம்வாழ்வில்
களிப்போடு வாழ்வதனைக்
காண்பதற்காப் பிறந்தோம்?
மெய்யுழைப்பால் வாழாத மெருகான
மனிதனைப்போய்
மேன்மையாளன் என்றேதான்
மொழிவதற்காப் பிறந்தோம்?
வையகத்தில் வறுமைதான் வேரறுத்து
வீழ்த்திடவே
வளமான சமுதாயம் வளர்ப்பதற்கே
பிறந்தோம்!
பையவேதான் பெண்ணினமும் பாரினிலே
சுதந்திரமாய்ப்
பாங்குடனே நாளுமோங்கிப்
பூத்திடவே பிறந்தோம்!!
6. சில்லரைகள் செய்கின்ற செல்லாத
ஆட்சியினைச்
சிரந்தாழ்த்தி வணங்குகின்ற
செயலுக்காப் பிறந்தோம்?
கொள்ளையர்கள் கொடுக்கின்ற கொடுமைகளை
ஏற்றுநாம்
கைக்கட்டி வாய்மூடிக்
கும்பிடவாப் பிறந்தோம்?
அல்லலைத்தான் வேரறுத்தே அச்சமின்றி
வாழ்ந்திடவே
அவனியிலே யாவருந்தான்
ஆர்த்தெழவே பிறந்தோம்!
எல்லோரும் ஒன்றென்னும் ஏகாந்த
உணர்வினையே
எந்நாளும் உருவாக்கி
ஏற்றுதற்கே பிறந்தோம்!!
7. நெஞ்சொடிந்த மனிதர்களாய்
நிலத்தினிலே வாழுகின்ற
நிழலான பாவைகளாய்
வாழ்வதற்காப் பிறந்தோம்?
வஞ்சகரின் வலைதனிலே வாடுகின்ற
பறவைகளாய்
வாழ்விழந்து வாட்டமுற்று
வருந்துதற்காப் பிறந்தோம்?
அஞ்சாமல் உண்மையினை நெஞ்சாரச்
சொல்லுகின்ற
ஆர்வமுள்ளோர் குணங்களைத்தான்
வளர்த்திடவே பிறந்தோம்!
கஞ்சிக்கும் கூழுக்கும்
கலங்கித்தான் தவிப்போரின்
கலயங்கள் நிறைத்துத்தான் காண்பதற்கே
பிறந்தோம்!!
8. நாட்டையே கெடுத்துநிற்கும்
நயவஞ்சகப் போலிகளை
நன்றியுள்ள மாந்தரென்றே
நவின்றிடவாப்; பிறந்தோம்?
வாட்டுகின்ற பசிப்பிணியை ஓட்டுதற்குப்
பாடுபடா
வன்நெஞ்சம் கொண்டோரை
வணங்கிடவா பிறந்தோம்?
கூட்டமாகச் சேர்ந்துதானே குவலயத்தைக்
காத்துநிற்கும்
குணமான அன்பரைத்தான்
கும்பிடவே பிறந்தோம்!
பூட்டியுள்ள இதயங்களைப் பண்பினாலே
திறக்கின்ற
பொன்னான மனிதர்களைப்
போற்றிடவே பிறந்தோம்!!