|

முயன்றால்
முடியும்!
வாக்குவாக்'
எனும் பெயருடைய
தவளையும்,
"கொர்கொர்'
எனும் பெயருடைய தவளையும் நண்பர்களாக இருந்தன.
அவை
இரண்டும் காட்டோரத்தில் வாழ்ந்து வந்தன.
குவாக்குவாக் மிகவும் தன்னம்பிக்கை
மிக்கது. எப்போதும் சுறுசுறுப்புடன்
இருக்கும். ஆனால்,
கொர்கொர் தவளையோ
ஒரு சோம்பேறித் தவளை. எதைக் கண்டும் அஞ்சும்.
அற்ப விஷயத்திற்குக்கூட
பெரிதாகக் கவலைப்படும்.
இரண்டும் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்தன.
அப்போது தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது.
அந்தக் குடிசைக்குள் நுழைந்து
பார்க்க விரும்பின தவளைகள். உள்ளே யார்
இருக்கிறார்கள்,
என்னென்ன பொருட்கள்
இருக்கின்றனஎன்று பார்ப்பதற்கு அவை இரண்டுமே
ஆர்வங்கொண்டிருந்தன. உள்ளே
தாவிக் குதித்து விளையாடலாம். தின்பதற்கு
ஏதாவது கிடைப்பதற்கும் வாய்ப்பு
இருக்கிறது.
அந்தக் குடிசை பூட்டிக் கிடந்தது.
"வீட்டுக்காரர்கள் வெளியே
சென்றிருப்பார்கள் போலிருக்கிறது. சன்னல்
வழியாக உள்ளே சென்றுவிடலாம்'
என்று முடிவு செய்து அவை இரண்டும்
சன்னலுக்குத் தாவின. வீட்டிற்குள்ளே
இருட்டாக இருந்தது. ஒன்றுமே தெரியவில்லை. ஆர்வ
மிகுதியால்,
உள்ளே
குதித்துப் பார்த்துவிடலாம் என்று நினைத்தன
தவளைகள்.
குவாக்குவாக் தவளையும்,
கொர்கொர் தவளையும் சன்னலிலிருந்து
குடிசைக்குள்
தாவின. அந்தக் குடிசையில் இருப்பவர் பால்
வியாபாரம் செய்பவர். பால் நிறைந்த
பாத்திரத்தை சன்னலருகில் வைத்துவிட்டு வெளியே
சென்றிருந்தார்.
துரதிர்ஷ்டம்... இருட்டில் ஒன்றும் தெரியாமல்
அந்தப் பால்
பாத்திரத்திற்குள்ளேயே விழுந்துவிட்டன
தவளைகள். முதலில் எங்கே
விழுந்திருக்கிறோம் என்றே அவற்றிற்குப்
புரியவில்லை.
ஒரு பால் பாத்திரத்திற்குள் விழுந்திருப்பது,
சிறிது நேரத்திற்குப்
பிறகுதான் அவற்றிற்குத் தெரிந்தது. அவை
மிகவும் அதிர்ச்சியடைந்தன.
குவாக்குவாக் மனம் தளரவில்லை. எது வந்தாலும்
சமாளிப்போம் என்ற உறுதியுடன்
நீந்தியது. குவாக்குவாக் தைரியம் கொடுத்துத்
தேற்றினாலும்கூட கொர்கொர்ரின்
பயம் அகலவில்லை. "ஐயோ..! பெரிய ஆபத்தில் வந்து
சிக்கிக்கொண்டோமே..?'
என்று
முற்றிலும் தளர்ந்தது. எதுவுமே செய்யாமல்
மிகவும் அஞ்சி பாத்திரத்திற்குள்
மூழ்கிவிட்டது.
எப்படியாவது தப்பித்துவிடுவோம் என்ற
நம்பிக்கையுடன் இருந்தது குவாக்குவாக்.
அது,
அந்த நிலையில் என்ன செய்ய முடியுமோ அதைச்
செய்துகொண்டிருந்தது. அது
பாத்திரத்திற்குள்ளேயே வட்டமடித்துச்
சுற்றிவந்தது. தன் கால்களைப் போட்டு
அடித்துக்கொண்டது. எங்கும் இருட்டு. சன்னல்
மட்டும்தான் தெரிந்தது.
ஆயினும்,
அது தொடர்ந்து நீந்தி பாலைக்
கலக்கிக்கொண்டிருந்தது.
இடைவிடாமல் நீந்தி பாலைக் கலக்கியதன் விளைவாக,
வெகு நேரத்திற்குப் பிறகு
பாலில் கட்டியாக வெண்ணெய் திரண்டு வந்தது.
குவாக்குவாக் தவளையே அதை
எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஒரு பொருள் கட்டியாக
தன்மீது மோதுவதை அது
உணர்ந்தது. மிகவும் முயற்சி செய்து அந்த
வெண்ணெய்க் கட்டியின் மீது ஏறி
நின்றது. அப்போதுதான்,
அதற்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது. அப்படியே
சற்று
நேரம் ஓய்வெடுத்துக்கொண்டது.
ஓய்விற்குப் பிறகு சற்றுத் தெம்பு வந்தது.
பிறகு,
குவாக்குவாக் சற்றும்
தாமதிக்கவில்லை. அந்த வெண்ணெய்க்
கட்டியிலிருந்து ஒரே தாவாகத்தாவி சன்னலை
அடைந்தது. அங்கிருந்து திரும்பிப் பார்த்தது.
இருளில் மங்கலாகத் தெரிந்தது
பால் பாத்திரம். அதன் நண்பனான கொர்கொர்ரைக்
காணவில்லை. மிகவும் மனம்
வருந்தியது குவாக்குவாக். வேறென்ன செய்ய
முடியும். அந்த கொர்கொர் தவளையும்
சற்று முயற்சி செய்து பார்த்திருக்கலாம்தானே.
|