|

சிறுவனும் திருடர்களும்
ஒரு மலைக் கிராமத்தில் நிறையக்
குடும்பங்கள் வசித்து வந்தன. அங்கே ராமன்
எனும் பணக்காரர் ஒருவரும்
இருந்தார். திருடர்களின் தொல்லையால் அந்தக்
கிராமமே சிரமப்பட்டு வந்தது.
தினமும் திருடர்கள் அங்குள்ள வீடுகளில் உள்ள விலையுயர்ந்த
பொருட்களைத்
திருடிச் சென்றனர். காவலர்கள் திருடர்களைப்
பிடிக்க எவ்வளவுதான் முயற்சி
செய்தாலும் அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.
திருடர்கள் சுலபமாகத் தப்பிச்
சென்றனர்.
ராமனுக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டில்
நிறையப் பணியாட்கள் வேலை
செய்தனர். ஒரு நாள் அவர் வீட்டில் திருடர்கள் வந்து
திருடப்போவதாக
அவருக்குச் செய்தி கிடைத்தது. ராமன் மிகவும்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்று எல்லா பணியாட்களிடமும் சொல்லி வைத்தார்.
அடுத்த நாள் இரவு ஒரு சிறுவன் ராமனின்
வீட்டிற்கு வந்தான். அவனுக்கு
யாருமில்லை. அவன் பணியாட்களிடம் கேட்டான்:""ஐயா,
எனக்கு மிகுந்த பசியாக
இருக்கிறது. உண்பதற்குச் சிறிது உணவு
கொடுங்கள். சாப்பிட்டுவிட்டு,
இரவு
இங்கே தங்கி நாளைக் காலையில் நான்
சென்றுவிடுகிறேன்.''
இவன் திருடர்களின் கையாளாக இருப்பானோ என்று
சந்தேகப்பட்ட பணியாட்கள் அவனைத்
திட்டினார்கள். சத்தம் கேட்டு அங்கே வந்த ராமன் விஷயமறிந்தார்.
பிறகு அவர்
சிறுவனிடம் சொன்னார்:
""தம்பி
ஊரே திருடர் பயத்தில்
நடுங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் உன்னை
இங்கே இரவு தங்க வைப்பது சிரமம். நீ இங்கே சாப்பிட்டுக்கொள்.
ஆனால் நீ
வெளியேதான் தங்கிக்கொள்ள வேண்டும்.''
சிறுவன் அங்கே போதுமான அளவு உண்டான். பிறகு
வெளியே வந்தான். அந்த இரவு
நேரத்தில் எங்கே செல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. எனவே
ராமன் வீட்டு
வாசலில் இருந்த ஒரு மரத்தில் ஏறி பாதுகாப்பாக
சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
நள்ளிரவானது. திருடர்கள் ராமனின் வீட்டிற்கு
வந்தார்கள். அவரது வீட்டுக்
கதவை உடைத்தார்கள். மரத்தின் மேலிருந்த சிறுவன் ஓசை கேட்டு கீழே
பார்த்தான். "எனக்கு உதவியவரின் வீட்டைக்
கொள்ளையடிக்கப் பார்க்கிறார்களே!
இவர்களைச் சும்மாவிடக்கூடாது...'
என்று நினைத்தான் அவன். உடனே
ஓசையெழுப்பாமல் கீழே இறங்கிச் சென்றான். சில நிமிடங்களுக்குள்
காவலர்களை
அழைத்து வந்தான். ராமனின் வீட்டை
முற்றுகையிட்ட காவலர்கள் திருடர்களை
சுலபமாகப் பிடித்தனர்.
ராமன் காவலர்களுக்கு நன்றி சொன்னார். அப்போது
தலைமைக் காவலர் சொன்னார்:
""எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம். எங்களை அழைத்து வந்தவன்
இந்தச்
சிறுவன்தான். நீங்கள் இவனுக்குதான் நன்றி
சொல்ல வேண்டும்...''
ராமன் சிறுவனைப் பார்த்தார். இந்த நல்ல
பையனைப்போய் சந்தேகப்பட்டு இரவு
நேரத்தில் வெளியே அனுப்பிவிட்டோமே என்று வருந்தினார். அவர்
அவனுக்கு
அறிவுச்செல்வன் என்று பெயரிட்டு தன் வளர்ப்பு
மகனாக்கிக்கொண்டார்.
அறிவுச்செல்வன் அந்தக் கிராமத்தில் உள்ள
பள்ளியில் இப்போது நன்றாகப் படித்துவருகிறான்.
|