|

முட்டாள் மன்னன்!
"காங்கேயம்
என்ற நாட்டை காங்கேயன் என்ற மன்னன் ஆண்டு
வந்தான். பெயருக்கேற்றபடி
காங்கேயன் காரியங்களை செய்து வந்தான்.
பாராட்டும்படியாக அவைகள் இல்லாததால்
அவன் மிகவும் கஷ்டப்பட்டான். அண்டை நாடுகளை பிடித்து தன் வசமாக்கி தன்
நாட்டின் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள
வேண்டுமென்று ஆசைப்பட்டான்.
அந்நாடுகளின் மீது படையெடுத்துச் செல்லும்
போது எப்படி படைகளை நடத்தி செல்ல
வேண்டும்,
முதலில் எதிரி நாட்டின் எந்த இடங்களை தாக்க
வேண்டும். பிறகு
எப்படி படிப்படியாக எதிரி நாட்டினுள் நுழைய வேண்டும்
என்பதை எல்லாம் அவனது
சேனாதிபதியும்,
படைத்தலைவர்களும் போர் முறையைப் பற்றி எவ்வளவோ எடுத்துச்
சொன்னர்.
ஆனால்,
காங்கேயன் அவைகளை கேட்பவனாக இல்லை. அவர்கள்
சொல்கிறபடி நடக்கிறவனாக இல்லை. படிப்படியாக எதிரி நாட்டினுள் புகுந்து
செல்வது எதிரிக்கு விழிப்புணர்ச்சியை கொடுத்து,
எதிர்த்து போரிடச் செய்து
விடுமென்று அவனே தீர்மானம் செய்து கொண்டு முதலில் எதிரி
அரசனின் கோட்டையை
பிடித்து விட்டால்,
அவன் சரணடைந்து விடுவான். நாட்டை எளிதாக பிடித்து
விடலாமென எண்ணினான். அதன்படியே நடக்கும்படி
சேனாதிபதிக்கும் படைத்
தலைவர்களுக்கும் உத்தரவிட்டான்.
அப்படி போர் செய்வதென்பது போர்
முறை இல்லை என்றும்,
அது நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை
வெட்டுவதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் எவ்வளவோ
எடுத்துச் சொன்னர். ஆனால்,
அவைகளை காது கொடுத்தும் கேட்கவில்லை. செவிடன்
காதில் ஊதிய சங்கு
போலாயிற்று. காலம் தான் அரசனுக்கு புத்தி புகட்ட வேண்டுமென்று அவன் கீழ்
பணி புரிகிற காரணத்தால் அவன் ஆணைக்கு
உட்பட்டனர் அதிகாரிகள்.
எதிரி
நாட்டரசனின் கோட்டையை காங்கேயனின் படைகள்
கைப்பற்றச் சென்றதும்,
எதிரி
நாட்டின் படைகள் அவ்வளவும் நான்கு புறமும்
சூழ்ந்து வியூகம் அமைத்து
காங்கேயன் படைகளை முறியடித்து அவர்களை
சிறைபிடித்தன. காங்கேயம் நாட்டின்
படையினரில் ஒரு கணிசமான அளவு எலிப் பொறியில் எலி மாட்டிக்
கொள்வது போல்
தங்களிடம் சிறைப்பட்டு மாட்டிக் கொண்டு விட்டதால்,
எதிரி நாட்டரசனின்
படைகள் காங்கேயம் நாட்டுக்குள் சுலபமாக
புகுந்துவிட்டது.
மன்னன்
நாட்டை விட்டு காட்டுக்கு ஓடினான். காட்டுக்கு
அவன் ஓடினாலும்,
பசி அவனை
விட்டுப் போகவில்லை. பசி அவனை மிகவும் வாட்டி
வருத்தியது. பொன் ஆபரணங்கள்
அவன் அணிந்திருந்தாலும் ஒரு கவளம் சோறுக்கு
கூட அவைகள் மதிப்பில்லாமல்
போய்விட்டன. ஒருவாய் சாதம் கிடைக்காதா என்று காடெல்லாம்
சுற்றி திரிந்தான்
மன்னன். அருவிக் கரையில் ஒரு குடிசை தெரிந்தது. குடிசை இருந்தால் அங்கே
மக்கள் நிச்சயமாக இருப்பர். அரசனாக சென்றால்
அவர்கள் பயப்படுவர் என்றெண்ணி,
தன் பொன் ஆபரணங்களை எல்லாம் கழற்றி ஒரு
துணியில் முடித்து மரப் பொந்து
ஒன்றில் மறைத்து வைத்து விட்டு அக்குடிசையை நோக்கிச்
சென்றான் மன்னன்.
அதை
நெருங்கும் பொழுதே குடிசையினுள்ளிருந்து
குழம்பு கொதிக்கிற வாசனை வந்து
மன்னன் நாசியைத் துளைத்தது. "இவ்வளவு வாசனையான
குழம்பு தயாராகிறது என்றால்
நிச்சயமாக சோறும் சுடச்சுட
வடித்திருப்பார்களே!'
குடிசையை அடைந்த மன்னன் உள்ளே எட்டிப்
பர்த்தான்.
ஒரு
பாட்டி அடுப்பின் எதிரே உட்கார்ந்து சமைத்துக்
கொண்டிருந்தாள். காட்டில்
சுள்ளி பொறுக்கி கட்டாக கட்டி தூக்கிச் சென்று
நகரத்தில் விற்றுப்
பிழைக்கிறவள் அவள்.
""பாட்டி!
காட்டில் வழி தவறி வந்துவிட்டேன். எனக்கு பசி
அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் சோறு
போடுகிறீர்களா!''
என்று கேட்டான் மன்னன்.
பாட்டி
அவனைப் பார்த்தாள். ஒட்டிக் கிடந்த வயிறு அவன்
பசியோடிருக்கிறான் என்பதை
பாட்டிக்கு உணர்த்திற்று. ""உட்காரப்பா,
சோறு போடுகிறேன்!''
என்று
சொன்னாள். கை,
கால் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான் மன்னன்.
அவன் முன் ஒரு இலையைக் கொண்டு வந்து போட்ட
பாட்டி,
ஒரு குவளையில் தண்ணீர்
கொண்டு வந்து வைத்தாள். பிறகு இலையில் சோறு போட்டு,
அதன் நடுவே குழம்பை
ஊற்றி விட்டு,
அவன் எதிரே உட்கார்ந்தாள். இலையில் சோற்றை
பார்த்ததும்,
மன்னனுக்கு பசி இன்னும் அதிகரித்தது. சோற்றின் நடுப் பகுதியில் கை
வைத்தான். கொதிக்கிற குழம்பில் கை வைத்ததும்
சுட்டது. ""ஐயோ,
சுடுதே!''
என்று கத்தினான் மன்னன்.
""அந்த
முட்டாள் ராஜா மாதிரிதானா நீயும்!''
என்று கேட்டாள் பாட்டி. பாட்டி எப்படி தன்னை முட்டாள் என்று சொல்லலாம்
என்று அரசருக்கு கோபம் வந்தது. ஆனாலும்,
தன்னை அடக்கிக் கொண்டான். பிறகு
பாட்டியைப் பார்த்து, ""பாட்டி...! பாட்டி...! நம் அரசன் காங்கேயனையா
முட்டாள் ராஜா என்கிறாய்?''
என்று கேட்டான்.
""ஆமா!''
என்றாள் பாட்டி.
""எப்படி
அப்படி சொல்கிறாய்?''
என்று விடாமல் கேட்டான்.
""சோறு
சாப்பிடும் பொழுது இலையில் ஓரத்திலிருந்து
சாப்பிட வேண்டும். பிறகு
கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதிக்குப் போக
வேண்டும். அப்படி சாப்பிடாமல்,
முதலிலேயே சோற்றின் நடுப்பகுதியில் கை வைத்தால் இப்படித் தான் சுடும். நம்
முட்டாள் ராஜா அடுத்த நாட்டை பிடிக்க போரிடச்
சென்ற போது,
அந்நாட்டை நான்கு
புறமும் சிறிது சிறிதாக பிடித்துக் கொண்டு செல்லாமல்,
முதலில் கோட்டையைப்
பிடிக்க தன் படைகளை அனுப்பி தோற்றுப் போனான்.
அது மாதிரியல்லவா நீயும்
சோற்றை ஓரத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டே
நடுப் பகுதிக்குச் செல்லாமல்,
சோற்றின் நடுவே கையை வைத்து சுட்டுக்
கொண்டாய்... அரசனைப் போல நீயும்
முட்டாள்தானே!''
என்றாள் பாட்டி. அதைக் கேட்டதும்,
தன் தவறை உணர்ந்தான்
மன்னன். இதையே தன் சேனாதிபதியும்,
படைத் தலைவர்களும் சொல்லிய பொழுது,
கேட்காமல் போய் விட்டோமே என்று வருந்தினான் மன்னன். அன்றிலிருந்து
பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்தான் மன்னன்.
|