திருக்குறள் தெய்வப்புலவர் தம் வாழ்நாள்
முழுவதும் ஆய்ந்து கண்ட எண்ணத் தொகுதி; பல்வகை
வாழ்க்கையினரோடு உராய்ந்து சீர்த்தூக்கித்
துணிந்து நிறுத்திய உண்மைத் தொகுதி; மக்களென
ஓரினம் உள்ள நாள் வரையும் கற்று ஒழுகத்தகும்
அறிவுத் தொகுதி. எண்ணுவோர்
எண்ணங்களுக்கெல்லாம் ஈடளித்து இனிதே
ஏற்றந்தரும் இத்தகு வியத்தகுத் தொகுதியை
எழுதி, இவ்வுலகம் உய்ய, ஈராயிரம் ஆண்டிற்கு
முன்பே ஈந்து, ஈடிலாப் புகழை அன்றும்,
இன்றும், என்றும் பெற்றொளிர்பவர். ஆவார்.
மானுடப்பிறவி:
மண்ணில் தோன்றியுள்ள பிறவிகளில்,
மிகச்சிறப்பானது மானுடப் பிறவி என்பது ஏற்றுக்
கொண்ட உண்மையாகும். அதனால்தான் ஒளவையாரும்
அரிது அரிது மானிடராப் பிறத்தல் அரிது
என்றார்.
மானுடப் பிறப்புச் சிறப்புற்று
நிற்பதற்குக் காரணம் என்ன?
மனம் என்னும் சிறந்த கருவியைப் பெற்று,
அதைப் பண்படுத்தவும், பயன்படுத்தவும்,
வல்லவர்களாக, அவர்கள் விளங்குவதே காரணம்.
மக்கள் வாழ்க்கை, மெய், வாய், கண், மூக்கு,
செவி என்பவற்றின் வாழ்வு மட்டும் அன்று.
இவையுமாய், இவற்றிற்கு அப்பாலுமாய் உணர்ந்து
அறிந்து, மனத்தால் வாழும் வாழ்க்கையுமாகும்.
திருவள்ளுவர் அறத்துப்பாலில், தனி
வாழ்க்கையை விளக்கி, அன்பை வளர்த்து, அறத்தைப்
போற்றி, மனத்தில் தூய்மை பெற்று வாழும்
வாழ்க்கை வகை கூறியுள்ளார். பொருட்பாலில் பொது
வாழ்க்கையை விளக்கி, அறிவின் வழி இயங்கி,
பொதுக் கடமையைச் செய்து, மனம் பயன்படும்
வகையைக் கூறியுள்ளார். காமத்துப் பாலில் காதல்
வாழ்க்கையை விளக்கி, காதல் கொண்டவரிடம்
கலந்தும் கரைந்தும், மனம் பண்படும் வகையைக்
கூறியுள்ளார்.
தீமைகள் தோன்றக் காரணம்:
அறிவு வளர்ச்சியின் குறைபட்டாலும், மனம்
பக்குவப் படாது அலையும் நிலைக்குள்ளாகும்
சூழலாலும், தீயப் பண்புகள் தலையெடுக்கின்றன.
அதன் காரணமாக, இன்னா செய்தல், உட்பகை, எள்ளி
நகையாடல், ஏற்றத்தாழ்வுகள், ஒழுங்கின்மை,
களவு, கொலை கொள்ளை, சூது, பொய், பொறாமை,
மனமாச்சரியங்கள், வஞ்சனை போன்ற பல்வேறு
இழிவுநிலைகள் உருவாகி, சமுதாயம் பாழ்நிலைக்கத்
தள்ளப் படுவதைக் காண்கிறோம்.
துன்பம் பெருகி விடும்:
மனித வாழ்வு, பொருள் துய்த்தல், பால்உறவு
என்ற இவற்றில் நடைபெற்று முடிகிறது. இந்த
இருவகைத் தூய்ப்பிலும் அறவழியே ஒழுகினால்தான்
இன்பமும் அமைதியும் நிலைக்கும். ஒழுக்கம்,
கடமை, ஈகை, என்ற மூன்று உறுப்புகள் இணைந்த
அறத்தின் நெறியினை வகுக்கவும், அதன்படி
நடக்கவும் அறிபவற்கு வீடு பேற்றுணர்வு அவசியம்
தோன்றும்.
இனி நீத்தார் பெருமை அதிகாரத்தில் ஆறாம்
குறளாக அமைந்துள்ள.
செயற்கரிய செய்வார் பெரியவர்;;
சிறிவர்
செயற்கரிய செய்கலா தார் (26)
என்னும் குறள் பற்றி, ஒல்லும் வகையில்
ஆய்ந்து, அதன் மூலம் கிடைக்கும் செய்திகளை
சிந்தைமிகு உணர்வுகளைப் புரிந்து கொள்ள
முயல்வோம்.
இக்குறளுக்கு திருக்குறள் புதைபொருள்
என்னும் நூல்வழி முத்தமிழ்க் காவலர் திருச்சி
கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தரும் பொருளை
முதற்கண் காண்போம்.
பெரியவர்கள் பிறரால் செய்வதற்கு அரிய
காரியங்களைச் செய்வார்கள். சிறியவர்கள்
அத்தகைய அரிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்
என்பது இதன் பொருளாம்.
இது வரை எல்லோராலும் இவ்வாறே பொருள்
கூறப்பெற்று வந்துள்ளது. அவ்விதமாயின் இது
மிகைப் படக் கூறல் என்ற குற்றத்தின்
பாற்பட்டு விடும்.
செய்வதற்கு அருமையான காரியங்களைச்
செய்பவர்களே பெரியவர்கள் என்று கூறிவிட்ட
பொழுதே சிறியவர்கள் அவ்வாறு செய்ய
முடியாதவர்கள் என்று தோன்றுகிறது. மறுபடியும்
சிறியர் செயற்கரிய செய்யார் என்று
கூறியிருக்க வேண்டியதில்லை அல்லவா?
வள்ளுவர் அதனை மறுபடியும் வற்புறுத்திக்
கூறவே அவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுவதும்,
கூறுவதும் வள்ளுவருக்குப் பெருமை அளிப்பதாக
இல்லை. ஆகவே, அதன் உண்மைப் பொருளை அறிய
வேண்டியிருக்கிறது.
ஏடு எடுத்து எழுதியவர்களின் அவசரப்
புத்தியும், கரையான்களின் வயிற்றுப் பசியும்
ஓன்றாய்க் கலந்து தமிழ்ச்சுவடிகளில் பல
பிழைகளை உண்டாக்கியிருக்கின்றன. அவற்றின்
ஒன்றே இதுவும்.
இக்குறளில் கு என்ற எழுத்தை க என்று
அச்சிட்டதே உண்மையை உணராவெட்டாமல் செய்து
விட்டது.
க-வை கு என்று திருத்தினால், குறள் முன்
உள்ளது போன்று சரியாகக் காணப்படும்:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குரிய செய்கலா தார்
இதன் பொருள்:-
பெரியவர்கள் பிறரால் செய்வதற்கு முடியாத
அரும்பெருங் காரியங்களைச் செய்வார்கள். ஆனால்,
சிறியவர்களோ எளிதில் செய்யக்கூடிய சிறிய
காரியங்களைக் கூட செய்ய மாட்டார்கள்
என்றாகும்.
கு என்ற எழுத்து உடைந்து க வாகத்
தோன்றியதன் விளைவே மேலே கண்ட பிழைக்குக்
காரணமாயிற்று.
இதுவரை பதிப்பித்த குறள்களை அடுத்த பதிப்பாகப்
பதிப்பிக்கும் பொழுது தமிழகப் பேரறிஞர்கள்
ஒப்பினால் இப்பிழைகளைத் திருத்தலாம்.
திருக்குறளைப் படிக்கும் பொழுது கருத்தூன்றிப்
படித்தால் அதன் புதைபொருள்களை எளிதில்
காணலாம்
இதுவே முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ.பெ.
விசுவநாதம் அவர்கள் புலப்படுத்தும்
கருத்தாகும்.
யார் பெரியார்?
ஒரு காலத்தில் வயதில் மூத்தவர்களைப் பெரியார்
என்று ஏற்றுப் போற்றினர். பின்பு பதவியில்
மூத்தவர்களைப் பெரியார் என்று புகழ்ந்தனர்.
பின் பணத்தால் உயர்ந்தவர்களைப் பெரியார் என்று
வாழ்த்தி அவர்களை வளைய வந்தனர். அதன் பின்
அறிவால் முதிர்ந்தவர்களை வியந்தும் நயந்தும்
ஏத்தி, பெரியார் என்று புகழ்மாலைச் சூட்டினர்.
புpன் வீரத்தால் மிக்கவரையும், துணிச்சலான
செயல்களையும் செய்து முடிக்கும் வல்லவரையும்
பெரியார் என்று எண்ணினர். வுpளையாட்டிலே
ஒப்பற்ற சாதனைகளைப் படைத்து வரலாற்றில்
ஒளிர்பவர்களையும் பெரியார் என்றனர். இலக்கியக்
கலை, இசைக்கலை, ஓவியக் கலை, சிற்பக்கலை,
நாட்டியக் கலை போன்ற பல்வேறு கலைகளில்
மிக்கோங்கி புகழால் உயர்ந்தவர்களையும்
பெரியார் என்றனர்.
திருவள்ளுவர் இத்தகையோர் எவரையும்
மேற்குறிப்பிட்ட பட்டியலில் இணைக்காது
புலனடக்கம் உடையவர்களையே பெரியார் என்று
எண்ணினார். அத்தகையோரே அரிய செயல்களைச் செய்து
அவனியில் அழியாது நிற்பர் என்றும், புலனடக்கம்
இல்லாதவர்கள் புலன் ஈர்க்கும் வழியில் சென்று
அலைந்து ஆற்றலை இழப்பதால், அரிய செயல்களைப்
செய்ய மாட்டார்கள் என்றும் தெளிவாக்கினார்.
அரிய செயல்களைச் செய்ய மாட்டாதவரைச் சிறியோர்
என்று பெயரிட்டு அழைத்து ஐயம் நீக்கினார்.
அடுத்து
எவ்வினைய ரேனும் இணைவிழைச்சு
ஒன்றியரேல்தெவ்வும் திசைநோக்கிக் கைத்தொழூஉம்
- அவ்வினைகாத்தல் இலரேல் எனைத்துணைய ராயினும்
தூர்த்தரும் தூர்ப்பார் அலர்.
என்பார் குமரகுருபரர். காம விச்சையை
விட்டவரைப் பகைவரும் வணங்குவர். காம இச்சையில்
உழல்வோரை இழிந்தோரும் பழிதூற்றுவர்.
(இணைஸ்ரீபுணர்ச்சி, தூர்த்தர்ஸ்ரீகாமுகர்).
நாமும், நம் கால வரலாற்றில் செயற்கரும்
செயல்கள் செய்து புகழ்பட்டியலில் தம்
பெயரினைப் பதித்து வைத்துள்ளோர் பட்டியலை
சற்றே பார்ப்போம்.
சான்றுகள்:
தந்தை பெரியார், மகாத்மா காந்தி அன்னை
தெரசா, ஐடாஸ்கடர், கர்மவீரர் காமாராசர்,
பேரறிஞர் அண்ணா, சுராமி விவேகானந்தர், தாமஸ்
ஆல்வாஎடிசன், மேரிக்யூரி, ஆல்பர்ட் சுவைசைர்
போன்ற அறிவியல் அறிஞர்கள் நாட்டு
விடுதலைக்குழைத்த வீரத்தியாகிகள். சாதனை
படைத்த வித்தகர்கள் போன்ற பல சான்றுகளை
வரலாற்று ஏடுகளில் நின்று ஒளிரக் காண்கிறோம்.
ஆகவே நாமும் வான்புகள் வள்ளுவத்தின் படி
நம் வாழ்வில் செயற்கரும் செயல்கள் செய்து
வீடும், நாடும், ஏடும் போற்ற வாழ்வோம்.
குறள்முரசு.மாதி.சி.குப்பன்