Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கட்டுரைகள்

 

 பொறியின்மை யார்க்கும் பழியன்று

 

மண்ணுலகம் வந்தவரை எல்லாம் விண்ணுலகம் அனுப்புவதற்;கு, வழிகாட்டிய நூல்களுக்கு இடையில், இம்மண்;ணுலகில் வாழும்வரை மூடப் பழகத்திற்கும் கண்மூடி வழக்கத்திற்கும் ஆட்படுத்திக்கொண்டிருக்கும், நூல்களுக் கிடையில் குறுகிய குறட்பாவடிவில் பரந்த வாழ்வியலுக்கான வளர் கருத்துகளை, விரிந்த அளவில் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், வகைப்படுத்தியும், தொகைப்படுத்தியும் முப்பாலாய்-முத்தமிழில் வழங்கியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவரே ஆவர்.

திருவள்ளுவர் காலத்தும் அதற்கு முந்தைய காலத்தும் வாழ்வில் ஊனமுற்றவரை உதாசீனப்படுத்தினர். விதியின் விளைவு, என்றும் பாவத்தின் பலன் என்றும் நாவிற்கு வந்தவாறு இழித்தும் பழித்தும் அவர்களை ஏசினர். அத்தகை யோரைக் காணவும் கண்டதும் கனிவுடன்  கலந்துரையாடவும் கூசினர். உறுப்புக் குறையினைச் சுட்டிக் காட்டி, குருடா! என்றும் செவிடா! என்றும், நொண்டி! என்றும், மொண்டி! என்றும், ஊமை என்றும் ஊளறுவாயா! என்றும் பலவாறு விளித்தும், கேலிகள் செய்தும்,பல்லைக் காட்டியும் எள்ளி நகையாடினர்.

         வாழ்வியல் இலக்கணம் வகுத்து, வான்மறையாகத் தொகுத்தளித்து, புகழ்பெற்றொளிரும் நம் வள்ளுவப் பேராசானோ இவற்றையெல்லாம் முற்றிலும் தகர்க்கும் வண்ணம்

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி (618)

என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

          உறுப்பு இல்லாதிருத்தல் குற்றம் அல்ல, எவராலும் அறிய வேண்டு வனவற்றை அறிந்து உழைப்பிற்கான முயற்சி செய்யாமல் இருத்தலே குற்றம். இதையுணர்ந்தே,

மற்றது வினையின் வந்தது ஆயினும்
மாற்றல் ஆற்றும் பெற்றியர்

என்று கவிச்சக்கரவர்த்தி கம்பரும்  இராமாயணத்தில் நகர்நீங்கும் படலத்தில் நயம்பட நவின்றுள்ளார்.
 
ஊனம் ஊனம் ஊனமில்ல பாருங்க
ஞானம் ஞானம் ஞானம் வேணும் கேளுங்க

என்று திரைப்படப் பாடலும் இதனைத் தெளிவு படுத்தும்.

ஆள்வினையுடைமை:
   
ஆள்வினை – செயலை இடைவிடாது ஆளுந்தன்மை
விடாமுயற்சி, மீண்டும் மீண்டும் வெற்றி நோக்கி
   முயற்சி மேற்கொள்ளல்

இவ்வதிகாரம், முப்பாலில் இடைப்பாலாய் அமைந்துள்ள பொருட்பாலில் நடுநாயகமாக அமைந்துள்ளது. பொருட்பாலில் ஐந்து உடமைகள்
உள்ளன. அவை
 
 1.அறிவுடைமை (43)
2.ஊக்கமுடைமை (60)
3.ஆள்வினையுடைமை (62)
4.பண்புடைமை (100)
5.நாணுடைமை (102) என்பன.

பொறியின்மை எனத்தொடங்கும் திருக்குறள்(618) ஆள்வினையுடைமை அதிகாரத்தில்தான் அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தில் அமைந்துள்ள ஏனைய குறட்பாக்களின் கருத்தினையும் சுருங்கக் காண்போம்.

 நம் தகுதிக்கு அரிய செயல் - முடியாத செயல் - என்று மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும் முயற்சியானது, அந்த அரிய செயலை முடித்தற்குரிய, வலிமையைக் கொடுக்கும். இன்றியமையாத வினையை மேற்கொண்டு முடிக்காமல் இடையில் குறையாக விட்டவரை, உலகமும் கைவிடும், ஆதலால், மேற்கொண்ட வினையை முயன்று முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் என்று இவ்வதிகாரத்தில் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

உண்மையும் இன்மையும்:

விடா முயற்சி பல்வகைச் செல்வங்களை உண்டாக்கும். முயற்சியின்மை, கொடிய வறுமையில் புகுத்தி விடும். முயற்சில்லாச் சோம்பேறியிடம் வறுமையாம் மூதேவி தங்குவாள் என்றும், முயற்சியாளன் காலடியில் செல்வமாம் திருமகள் தங்குவாள் என்றும், அறிந்தோர் சொல்லுவார் என்றும், நம் பேராசான் நினைவூட்டுகிறார்.

முயற்சியின் பயன்:

 இக்கட்டுரைக்கு எடுத்துக் கொண்ட குறளின் கருத்தைக் குறித்து விளக்கப் புகுவோம்.

 “பொறியின்மை யார்க்கும் பழியன்று”(618) கைகால் முதலிய உறுப்புகளின் குறைவோ, ஒத்துப்போகும் நல்ல இயற்கைச் சூழல் (ஊழ்) இன்மையோ, யாருக்கும் பழியாகாது. அறிய வேண்டியவற்றை அறிந்து, வெற்றியடைவதற்குச் செய்ய வேண்டிய முயற்சியைச் செய்யாமையே பழியாகும்.

 குருடு, செவிடு, நொண்டி, முடம், ஊமை, போன்ற உடற்குறையுள்ளோர் பெருமுயற்சியுடன் செயற்கரியன செய்து, பெரும்புகழும், பயனும் பெற்று ஒளிர்வதை வரலாற்றில் காணலாம்.

அறிவுப் பிறப்பு:
 
மானுடப் பிறப்பு மற்ற பிறப்பைக் காட்டிலும் உயர்ந்தது. அறிவு அதிகம் பெற்றுத் திகழ்வது. உடம்பால் ஒரு குறை இருப்பினும் அவ்வுடற்குறை நம் வாழ்விற்கு ஒரு பெரும் இடையூறு அன்று.

கண் குருடு, காது செவிடு, வாய் ஊமை, காலில்லா நொண்டி, கையில்லா மொண்டி, குள்ளவடிவினர், போலியோ நோயால் பாதிக்கப் பெற்று ஊன முற்றோர் போன்றவர் வாழ்க்கை இழந்தவர்தாம் எனக் கருதுவது மானுடப் பிறப்பையே அவமதிப்பதாகும்.

கல்வியில் கருத்தூன்றும் மாணவர்கள்:
 
பள்ளியில் படிக்கும் மாணவன் பாடநூல் முழுவதும் வைத்து இருந்தாலும் மாணவன் ஒருவன், வேண்டும்போது எடுத்துப் படித்துக் கொள்ளலாம் என்று சோம்பலால் காலம் கழிப்பான். தன்னிடம் நூல்கள் உள்ளன என்னும் இறுமாப்பால் ஆசிரியர் பாடம் கற்பிக்குங் காலும் நன்குக் கவனிக்க மாட்டான்.

பாடநூல்கள் இல்லா மாணவனோ, குறை நிரப்பும் வேகத்திலும், விவேகத்திலும், ஆசான் சொல்வதை அக்கறையுடன் கவனித்தலும், நூல்கள் உடையவனிடத்தில் சென்று, உடனுக்குடன் வாங்கிக் கற்றும் தேவையான குறிப்புகள் எடுத்துக் கொண்டும் நன்னிலைப் பெறுதலை கண் கூடாகக் காண்கிறோம்.

நாட்டிலும் ஊனமில்லா நன்மக்கள், முயற்சியும் காலம் போற்றலும் இன்றி, சோம்பலில் ஆழ்ந்து, கருத்துமின்றி வாழ்ந்து, பின்னிலை அடைவதைப் பெரும்பாலும் அறிகிறோம்.

 ஆனால், உடலில் குறைபாடுடைய மக்கள் யாவரும் சுறுசுறுப்பும் அறிவுக் கூர்மையுடையவராய் விளங்கக் காண்கிறோம் தனக்கு ஒரு குறையுண்டு என்று தெளிவாக உணர்ந்துள்ள அத்தகையோர், அறிவால் ஈடு செய்ய முனைவது, அவர்தம் பிறப்பியல்பாகக் காணலாம். உள்ளது கொண்டு இல்லது நிறப்பிக் கொள்ளும் நினைப்பரிய வன்மை, நம் அறிவின் இயல்பு என்பது திருவள்ளுவர் தெரிவிக்கும் உண்மையாகும்.

  இதற்குச் சான்றாக
 
வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
(622)
   
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பைக்கு படாஅ தவர்
(623)

என்னும் குறட்பாக்களைக் காட்டலாம்.

இப்படி எண்ணற்ற செய்திகள் அறியுங்கால் நமக்கு என்ன புலப்படுகின்றது? பொறியின்மை பழியன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மையே பழி என்பதுதானே!
 
ஆகவே, ‘பிறப்பொடு அமையும் குறைவுடை அமைவுகள் பகைப்பதற்கோ, பழித்துரைப்பதற்கோ காரணம் ஆகா என்போம்.

 குருடும், செவிடும், முடமும், ஊனமும் ஆகப் பிறக்கும் மக்கள் உலகில் உளர். இக்குறைப் பிறப்பு விரும்பிப் பெற்றுக் கொள்வதில்லை. மக்கள் ஆற்றலுக்கு உட்படாச் செயல் பலவற்றின் இஃதொன்று. பெற்றோரைப் பொறுத்தும், அவர்தம் முன்னோரைப் பொறுத்தும் பிற சூழ்நிலையைப் பொறுத்தும் பிறக்கும் குழந்தையின் உடலுருவம் அமைகின்றது. ஆதலின் உடற்குறையைச் சுட்டிக் காட்டி இகழ்தல் கூடாது. கூடவே கூடாது. அதனால்தான் நம் தெய்வப்புலவர்

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” (667) என்று எச்சரித்துள்ளார்.
 
 ஒத்த வாய்ப்பும், தொழிலும் அளித்தால் உடல் நலம் பெற்றுள்ள  மக்கள் முன்னேறுவது போலத் தரம் சிறிதும் தாழ்வின்றி, குறையுடல் மக்களும் முன்னேற்றம் காட்டுவர். புகழினைக் கூட்டுவர். வுயப்பினையூட்டுவர்.
 
உறுப்புக் குறைவுடன் மக்களாய்ப் பிறந்தோர் எவரும், அறிவற்றவர் என்று கொள்வது தவறாகும். ஊனமுற்றோர் பாவப்பிறப்பு என்றோ, அத்தகையோர் பிச்சையெடுத்துதான் வாழ்தல் வேண்டும் என்றோ நினைத்தல் கூடாது. இத்தகையவர்க்கு ஈகை செய்க என்று திருக்குறளில் எங்கேனும் சான்று இதற்கு உண்டா! இல்லை. ஆனால். பிற நீதி நூல்களில் காணலாம்.

ஊனமுற்றும்; உயர்ந்து காட்டியோர்:

 ஏடு ஆயிரம் கோடி எழுதாதே தன் மனத்தே எழுதிப் படித்த வித்தகர் அந்தகக் கவி வீரராகவர்; இடைக்காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு கண்பார்வை முற்றும் இழந்தும் பதின் கவனகராகப் புகழ் பெற்று பவனி வந்த பெ.இராமையாப் பிள்ளை; குருடராவும், முடவராகவும் இருந்த இருவர் தங்களுக்குள் நண்பராகி இரட்டைப் புலவரென வாழ்வில் ஒளிர்ந்தவர், கால் ஊனமுற்றவராக விளங்கிய பண்டித கதிரேசஞ் செட்டியார், புலவர் கீரன்; இருவரும் அறிவுவளர்த்தால் உயர்ந்து காட்டிய திறம், செவிடராக  இருந்த நாமக்கல்லார் கவிதைச் சிறப்பால் அரசவைக் கவிஞராக உயர்ந்த நிலை, குருடு, செவிடு, ஊமை ஆக மூவகையிலும்
ஊனமுற்றிருந்த ஹெலன் கெல்லர் தம் தொடர் முயற்சியால் வாழ்வில வென்று தன் திறமைகளை வெளிப்படுத்தி உலகப் புகழ் பெற்றமை போன்ற எண்ணற்ற சான்றுகளைக் காட்டலாம்.

தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டு மார்ச்சுத்திங்களில் நிகழ்ந்த 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் வரலாறு பாடத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்ற ஈரோடு தர்மலிங்கம் என்ற மாணவனும் ஊனமுற்றவன் தான். அவன் போலியோ நோயினால் பாதிக்கப் பட்டு இரு கால்களும் செயலிழந்த நிலையிலும், முயன்று படித்து, முன்னேறி வெற்றிக் கொடி நாட்டியுள்ளான். இவன் படித்த பள்ளி ஈரோடு சிவகிரி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியாகும்.

     அதுமட்டுமல்லது இம்மாணவனுக்கு வரலாறு பாடம் கற்பித்த ஆசிரியர் திரு. ஜெகதீசன் என்பவரும், பிறவிக் குருடரே என்பதை அறியுங்கால் வியப்பே மேலிடுகின்றது. அவர் குருடாயிருந்தும், முயன்று வரலாறு பாடத்தை, நன்கு கற்பித்துள்ளார் என்பதையும் அறிந்து போற்ற வேண்டும் அன்றோ!

திரு. ஜீ.டி. நாயுடு அவர்கள், ஊமையர்களாக இருந்த மூன்று இளைஞர்களை அழைத்து வந்து, முறையான பயிற்சியளித்து, பொறியாளராக மாற்றினார் என்பதை அறியும்போது ஊனமுற்றோர் எவரும் தாழ்ந்தவர் அல்லர். என்பதை உணரலாம்.

ஆகவே சோம்பலும் தாழ்வு மனப்பான்மையும் அகற்றி, ஊக்கமும், வினைத்திட்பமும் கொண்டு விடாது முயன்றால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வெகுமதிகளும் விருதுகளும் மேலும் மேலும் கூடும். தெய்வத்தால்  ஆகாதெனினும் கொள்ளும் முயற்சிக்கேற்ற கூலியாவது கிடைக்கும்.

ஆகவே ஓய்வின்றி வலியறிந்து, காலம் அறிந்து, இடம் அறிந்து ஊக்கமுடன் செயற்படின் ஊழையே உப்பக்கம் ஓட்டி உவகையுடன் வாகை சூடுவோம்.

புலவர் குறளேந்தி


 


Home

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved