Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கட்டுரைகள்

உழவுக்கலை

நீதிக்களஞ்சியங்களில் நிகரற்று விளங்கக்கூடியதாகவும், சாதிசமய பேதங்களைக் கடந்து நிற்கக்கூடியதாகவும், ஆதிபகவனை, தீதிலா வாழ்வியயல் நெறிகளைத் தெளிவாக எடுத்துனரக்கக்கூடியதாகவும் உள்ள ஓர் ஒப்பற்ற திருக்குறள் நூலை இவ்வுலகிற்களித்த உயர்ந்தவர், உன்னத உத்தமர் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆவார்.

 

                சின்ன சின்ன குறளிலே, வண்ண வண்ணக் கருத்துகளை, எண்ண எண்ண இனிக்கின்ற கன்னல் சாராய், வாரி வாரி வழங்கிய வள்ளுவப் பேராசான் உழவுத்தொழில் பற்றிக் கூறியுள்ள கருத்துகளை மட்டுமே ஈண்டு நோக்குவோம்.

 

                எத்தனையோ கலைகள் உலகில் மின்னிக் கொண்டிருந்தாலும், அத்தனைக்கும் உயர்வாய், உயிராய், தாயாய், மணிமுடியாய் விளங்கிக் கொண்டுள்ள ஓர் உன்னதக்கலை உழவுக்கலை ஆகும்.

 

                ஏர்த்தொழில் என்பது மனிதகுலம் உயிரோடு வாழ்வதற்கான வேர்த் தொழில், காடெல்லாம் நாடோடியாய் சுற்றித்திரிந்து வந்த மனிதனை, பாடுபட்டு பசியாற்றிக் கொள்ள ஏற்பட்ட மூலத் தொழில் காட்டில் வாழ்ந்து வந்த விலங்குகளை வேட்டையாடி கடும்பசி போக்கிவந்த மனிதனின் எண்ணத்தை மாற்றி அமைத்த சைவத் தொழில் அத்தொழிலின உன்னதச் சிறப்பை அறிந்த அய்யன் அவர்கள் உழவுத் தொழிலுக்காக மட்டுமே தனியோர் அதிகாரம் படைத்துள்ளார். நெசவுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவரென்று வள்ளுவ பெருமானைக் கூறினாலும் அதைப்பற்றிய சான்றுகள் ஒன்றும் கிடைக்க வில்லை. ஆனால் அவர் உழவுத் தொழிலைத் தொடர்புபடுத்தி, வில்கொண்டு பார்வென்ற வில்லாளியை வில்லேர் உழவரென்றும் சொல்கொண்டு செகத்தில் வாழ்ந்த சொல்லாளியை சொல்லேர் உழவரென்றும் குறிப்பிட்டுள்ளவை எண்ணி மகிழக் கூடியதாக உள்ளது.

 

                நம் பெருநாவலர் உழவு என்னும் அதிகாரத்தில் அமைத்துள்ள பத்து குறட்பாக்களில் முதல்குறட்பாவில் உழவுத் தொழிலின் சிறப்பினைனயும் அதனை அடுத்த ஐந்து குறட்பாக்களில் உழவனின் உயர்வினையும், அதற்கடுத்த நான்கில் உழவன் கடைபிடிக்க வேண்டிய உழவுத் தொழில்பற்றிய உண்மைகளையும் உலகிற்கு முறையே எடுத்தியம்புகிறார்.

 

 

உழவின் பெருமை:

 

 

                மன்னனாக இருந்தாலும் மாபெரும் கலைஞனாக இருந்தாலும் கணினியின் மூலம் கணக்கில்லாச் செல்வத்தை ஆள்பவனே ஆனாலும் கடலில் மூழ்கியெடுத்து கோடிக் கோடியாய்ப் பொருள் சேர்ப்பவனே யானாலும் எங்கும் தங்கத்தையே வைத்து வாணிபம் நடத்துகின்ற தனாதிபதியே யானாலும் உழவரை நம்பித்தான் வாழவேண்டியே உள்ளது.

 

                உலகில் உள்ள உயிர்கள் வாழ என்னவழியென்று எப்படி எப்படி எல்லாம் எண்ணிப்பார்த்தாலும் உழவுத் தொழில்தான் முன்வந்து நிற்கிறது. தேர் இருந்த இடத்திலிருந்து புறப்பட்டு சுற்றிச் சுற்றி எங்குச் சென்றாலும், முடிவில் தேர் முட்டிக்கே வருவது போல் பிற தொழில்கள் உழவுத்தொழில் பின்னால் தான் வரவேண்டியுள்ளது. உயிர்கள் உயிர்வாழ, வெயிலிலும் மழையிலும் காற்றிலும், பனியிலும் அலைந்து திரிந்து உழைத்து உழைத்து தொல்லைபட்டாலும் நம் வள்ளுவர் எல்லா தொழிலுக்கும் மேலான தொழில் உழவுத்தொழில் தான் என்பதை

 

 

                                சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

                                உழந்தும்  உழவே தலை (1031)

 

               

                என்னும் குறட்பாவில்  கூறியுள்ளார்.

 

உழவனின் உயர்வு:

 

                நாங்கள் சேற்றில் கால்வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்கமுடியும் என்றும், எங்கள் ஏர்ஒட்டம்நின்று போனால் உங்கள் காரோட்டம் என்னவாகும்? என்னும் வரிகளையும் எண்ணிப் பார்க்கும் போது உழவரின்சிறப்பு உணரமுடியும். பல் வேறு வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு (காலம் நேரம் பார்க்காது கடுமையாக நிலத்தில் உழைக்கின்ற தொழிலாளிதான். இந்த உலக மக்கள் அடங்கிய பெரும் தேருக்கு அச்சாணிபோன்ற காப்பாளர்களாக உள்ளார்கள்.

 

                உலகில் வாழும் பல்வேறு தொழில் புரியும் மக்களின் வயிற்றுப்பசியைப் போக்குகின்ற தாயினும் மேலான பண்பைப் பெற்றவர்கள் உழவர்களாவர். ஒரு மாடிவீட்டின் கடைக்கால் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல தேரின் அச்சாணி தேரினை இயக்கச் செய்வது போல் உழவர்களும் சமுதாயமெனும் தேரின் அச்சாணியாகத் திகழ்கிறார்கள். அதனால்தான் உழவர் வாழ்வை உன்னிப்பாய்க் கவனித்துணர்ந்து நம்பேராசான்

 

 

                                உமுவார் உலகத்தார்க்(கு) ஆணி அஃ(து) ஆற்றாது

                                எழுவாரை எல்லாம் பொறுத்து (1032)

 

               

என்னும் குறள்வழி தெளிவுபடுத்துகிறார்.

 

 

                இவ்வாறு உழவுத்தொழிலைச் செய்யாது பிறதொழில்கள் செய்வார் யாவரையும் தாங்குதலால் உலகத்தார் ஆகிய தேர்க்கு உழவர் அச்சாணியாவர் என்பது விளங்குமன்றே காடுகொன்று, நாடாக்கிக், குளந்தொட்டு என்று பட்டினப்பாலை கூறுவதுபோல் உழுவார் என்பது உழுவிப்பார் மேலும் செல்லும்.

 

                உழவுத்தொழிலைத் தாமே செய்து வாழ்பவரை உழுவார் என்றும், தம் செல்வ மிகுதியால் தாம் அத்தொழிலைச் செய்யாது பிறரைக் கொண்டு உழுவித்து வாழ்பவரை உழுவிப்பார் என்று வேளாளரிலும் இருவிதமுண்டு. இதனைத் தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியலில் மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே (29) என்பதனாலும் அறியலாம். இதனால் உழுதல் தொழிலே சிறந்த தொழில் என்றும் ஏனைய தொழில்கள் தொழில்களாகாவென்றும் பிரித்துக் காட்டப்படுகின்றது.

 

                உழவன் நெற்றி வியர்வை முத்து முத்தாகச் சிந்தியே, நெல்மணியைக் கொத்து கொத்தாக காண்கிறான். குடும்பத்தாரின் பசியைப் போக்கி சுதந்திரமாக வாழ்கிறான். ஆனால் பிற தொழில் புரிவோர் மற்றவரை வணங்கித் தொழில் செய்து, அடிமைவாழ்க்கையினைக் கொண்டு பின் செல்பவராகவும் உள்ளனர் என்பதை தெய்வப்புலவர்

 

 

                                உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

                                தொழுதுண்டு பின்செல் பவர் (1033)

 

 

                என்னும் குறள்வழி காட்டுகிறார்.

 

 

                மக்கட்பிறப்பில் ஒருவராய் இருந்தும், தன் மானம் இழந்து பிறரை வணங்கி அவர் ஏவிய தொழிலைச் செய்து, கைகட்டி வாய்பொத்தி அவருக்குப் பின் செல்லுகின்ற இழிந்த நிலை வாழ்வு ஒரு வாழ்வாகுமா? ஆகவே தமக்கு உரிய உழவுத் தொழிலைச் செய்து

சுதந்தரத்தோடு வாழ்ந்தும் உலகத்தாரையும் உண்பித்து அவரையும் வாழச்செய்பவரே மக்கட்பிறப்பினராய் வாழ்பவர் என்று முப்பாலார் கூற்றால்; உழுதற் தொழிலே நற்றொழில் என்பதை நன்றாக உணரலாம்.

 

                மேலும் தானியக்கதிரைக் குடையாகக் கொண்டு சுதந்திர மாக ஆட்சிபுரியும் மன்னர்களான உழவர்கள் வெண்கொற்றக் குடையின் கீழ் ஆட்சிபுரியும் வேந்தகர்களையும் செல்வந்தர் என்று கூறிக் கொண்டு குடைபிடித்து திரிகின்றவர்களும், தன்துயரை நாடிவரும் படியான செல்வாக்கைப் படைத்தவர்கள்தான் உழவர்கள் என்பதை

 

 

                                பலகுடை நீழலும் தம்குடைக் கீழ்க்காண்பர்

                                அலகு உடை நீழலவர் (1034)

 

 

விளக்கம்

               

                உழவரின் உழைப்பால் உணவுப்பொருள் மிகுதியாகப் பெற்ற அரசன், அப்பெருட்களைக் கொண்டு ஏனைய அரசர்களையும் வென்று தன்குடையின் கீழ் கொண்டு வரும் வல்லமை பெற்று விடுகிறான். யாசிப்போர்க்கெல்லாம் ஈந்து வறுமை என்னும் வெயிலால் வருந்துகின்ற அவரைத் தம் கொடை என்னும் நிழலில் தங்கச்செய்து நிம்மதியுறச் செய்கிறான். ஆகவே இரப்போர்க்கு சுற்றமாயும், புரப்போராகிய அரசர்க்கு வெற்றியாயும் இருப்பவர் உழவரே என்பதை அறிகின்றோம்.

 

                நிலத்தை வணங்கி, நெஞ்சில் நேர்மையை வளர்த்து உடலால் உண்மையாக உழைத்து உண்ணக்கூடிய தானியத்தை உருவக்கி, உற்றார் உறவினர்களையும் ஒன்று சேர்த்து உண்டுமகிழக்கூடிய இயல்பான குணத்தைப்பெற்ற உழவர்கள் பிறரிடம் சென்று ஒருபோதும் பிச்சை கேட்க மாட்டார்கள் என்றும் பசி என்று கேட்டு வருகின்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாது சிறிதளவேனும் கொடுக்கக்கூடிய குணத்தையும் பெற்றவர்கள் என்றும் உழவர்களின் பெருமையாக பின்வரும் குறள்மூலம் கூறுகின்றோம்.

 

 

                                இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது

                                கைசெய்தூண் மாலை யவர் (1035)

 

 

                உழவனின் உயர்வுகளை உயர்த்திக் காட்டிவந்த வள்ளுவபெருந்தகை இத்தன்மை யோடு எல்லா ஆசைகளையும் துறந்து காப்போம் என்று சொல்லிக் கொள்ளும் துறவிகள் கூட உழவுத்தொழில் நடைபெறாமல் நின்றுவிட்டால் வாழமுடியாது என்பதையும்

 

 

                                உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம்

                                விட்டேம் என்பார்க்;கு நிலை (1036)

 

 

                என்னும் குறள்வழி தெளிவாகத் தெரிவிக்கின்றார்.

 

 

உழவனுக்கு அறிவுரை:

 

                காலம் காலமாகப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு பட்டறிவுடையோரும், வேளாண் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றோரும் கூறிடாத, உழவின் கலை நுணுக்கத்தை வள்ளுவப் பெருமான் உழவர்களுக்கு எடுத்து இயம்புகிறார். உழவு என்பது உயர்கலை அந்தக்கலையை எப்படி செய்தால் அதிக விளைச்சலைப் பெறலாம் என்பதை உழவு செய்யும்போது ஏற்படுகின்ற மண் கட்டிகள் நன்றாக உடையுமாறு உழுது ஒருபங்குமண் காற்பங்காகச் சுண்டும்படி ஆறவிட்டு விதை விதைத்தால் கையளவு எருக்கூட போடாவிட்டாலும் மிகுந்த விளைச்சல் உண்டாகும் என்பதை

 

                               

தொடிபுழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

                                வேண்டாது சாலப் படும் (1037)

 

 

                குறள்வழி உழவின் இலக்கணத்தை உற்றுநோக்க உரைத்துக் காட்டுகின்றார்.

 

                மேலும் உழவர்கள் உற்றுநோக்க வேண்டிய கருத்தாக நிலத்தை அகலமாக உழுது செல்வதைவிட ஆழமாக உழவேண்டும் என்றும் , அதைவிடமுக்கியமாக எருபோடவேண்டும் என்றும், அதைவிட பயிரில் முளைத்திருக்கும் புல்பூண்டு களைகளை நீக்கி நீர்பாய்ச்ச வேண்டும் என்றும், அனைத்திற்கும் மேலாக பயிருக்கு அழிவோ, நோயோ ஏற்படாமல் பாதுகாத்தல் என்பது மிகமிக அவசியம் என்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வைந்து தொழிலையும் முறையே செய்து முடித்தல் வேண்டும் என்பதை

 

               

                                ஏரினும் நன்றாம் எருஇடுதல் கட்டபின்

                                நீரினும் நன(று) அதன்காப்பு

 

 

                என்னும் குறள்வழி நம் தெய்வப்புலவர் அறிவித்துள்ளார்.

 

                பயிர்பார்க்காமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது என்பது போல் உழவன் ஏதோ உழுதோம், நட்டோம், கதிர்அறுத்தோம் என்று இருந்து விடாமல் நிலமகளை அவ்வப்போது சென்று பார்த்து செய்யவேண்டியனவற்றை உணர்வோடும் செய்தால்தான் விளைச்சல் நன்றாக கிடைக்கும். இதனைக் கணவன் மனைவியைத் தொடர்ந்து கவனியாது போனல் மனைவி பிணங்கி விடுவாள். அதேபோல் நிலமகளும் பிணங்கி விடுவான் என்பதை உலகத்தில் எந்த மகானும் சொல்லாத ஓர் அற்புத அறிவுரையை அய்யன் திருவள்ளுவர்

 

 

 

                                செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலத்து

                                இல்லாளின் ஊடி விடும்

 

                என்னும் குறளில் குவலயத்தார்க்கு அறிவுறுத்துகிறார்.

 

                அதாவது நிலத்திற்குரிய ஒருவன் மற்றவர்களைக் கூவித் தொழில் செய்யாமல் தானே பார்த்துச் செய்யவேண்டுவனவற்றை ஒன்றன்பின் ஒன்றாக முறையோடு செய்தல் வேண்டும் என்றும், அவ்விதம் செய்யாவிட்டால் கணவன் ஒருவன் தன்னோடு இருந்து தனக்கு வேண்டியவைகளைச் செய்யாமல் பரத்தையர் முதலியோரிடத்திலிருந்து இன்பம் துய்ப்பானாயின், அவன் மனைவியானவள் அவனை வெறித்துச் சினங்கொண்டு அவனுக்குப் போகத்தைக் கொடாததுபோல் நிலமும் போகம் என்னும் விளைவினைத்தராது என்றும் அறிகிறோம்.

 

                மேலும் நிலத்தை வைத்துக்கொண்டு உழைக்காமல் வயிற்றுக்கு உணவில்லையே என்று சொல்லும் சோம்பேறிகளையும் தன் உள்ளத்தில் நினைத்து அவர்களைக் கண்டால் இந்த பூமிதேவிகூட சிரித்து ஏளனம் செய்யும் என்று நுட்பமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

               

                இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்

                                நிலம்என்னும் நல்லாள் நகும் (1040)         என்பதே அக்குறள்

 

 

 

அக்கால உழவர்நிலை:

 

                வள்ளுவர் காலத்திலே மாதம் மும்மாரி பொழிந்திருக்கலாம்; மக்களோ எல்லா கலைகளையும் தன் கைவழியே செய்து வாழ்ந்திருக்க வேண்டும். கால்நடைச் செல்வமே அவர்களுக்கு பெருஞ் செல்வமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். மக்கட்தொகையோ மிக மிகக் குறைந்தே இருந்திருக்க வேண்டும்; மண்வளமோ இயற்கை உரத்தால் செழித்திருந்திருக்க வேண்டும். நிலங்களோ அளவில் உழவர்களுக்கு பெரும் அளவில் சொந்தமாக இருந்திருக்க வேண்டும். கைத் தொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்களும் உழவர்களோடு இணைந்து வாழ்ந்திருக்க வேண்டும்; உழவர்களும்  அனைத்துவகைத் தொழிலாளர்களையும் உள்ளன் போடு உறவுபாராட்டி உணர்வோடு கழித்திருக்கவேண்டும். இப்படியெல்லாம் அனைத்து வகை மக்களும் உழவர்களோடு இணைந்தும் பிணைந்தும் உழவர்களோடு வாழ்வதைக் கண்டு மணிமுடிதரித்த மன்னனும் ஒருபடி தன்னிலையில் இருந்து இறங்கிப்போற்றி வாழ்ந்திருக்க வேண்டும். ஆகவேதான், தெய்வப்புலவர் வேளாண்மைத் தொழிலை மேலாண்மைத் தொழிலாக மனத்தே எண்ணி உழவுத் தொழிலுக்கு ஒரு அதிகாரம் ஒதுக்கி இருக்கவேண்டும். ஆகவே இது நியாயம் தானே.

 

 

இக்கால நிலை:

 

                அக்கால உழவர் நிலைக்கும், இக்கால உழவர் நிலைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு காணப்படுகின்றது. உயர்ந்து விளங்கிய உழவுத் தொழில் ஆரியர் தாக்கத்தால் சூத்திரர்களே செய்யும் தாழ்ந்த தொழிலாக மாறிப் போய் விட்டது.

 

 

                இப்போது விளை நிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறிவிட்டன, போதிய மழை இன்மையால் ஆறு, ஏரி குளங்களெல்லாம் வற்றிவிட்டன, மக்களின் அறியாமையால் காடுகளெல்லாம் மிக வேகமாக அழிக்கப்பட்டு விட்டன. இயற்கை வரத்தால் வனத்தால் மண் வளமிக்க நிலங்களெல்லாம் செயற்கை உரத்தால் தன்மைஇழந்து பயிர்கள் வீணாயிற்று உழவுத்தொழில் வருவாய் மிக மிகக் குறைந்ததனால் உழைப்பே மிக மிக அதிகம். இயந்திரங்களின் வரவால் ஏழைகளின் செல்வங்களாக இருந்த கால்நடைகள் யாவும் கவனிப்பாரற்றுப் போய் விட்டன. அதனால் உழவர்களுக்குப் பொருளாதார வளர்ச்சி படிப்படியாய் வீழ்ச்சி பெற்றது. மேலும், எந்திரமயமான வாழ்வில் எளிய உழைப்பினால் கூடுதல் வருவாய் கிடைப்பதால் உழைப்பின் மிகுதியால் உழவுத்தொழிலை ஒதுக்கி விட்டனர். உழவர்களுக்குத் துணையாக வாழ்ந்து உழைக்கும் மக்களுக்ம் பல்வேறு காரணங்களல் ஊரைவிட்டு வௌ;வேறு இடங்களுக்குச் சென்று செயல்படுகின்றனர். அதனால் உள்ளூரில் உழவர்க்கு உறுதுணையாவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து போனதால் பருவத்தே பயிர்செய்ய முடியாமல் பல்வேறு இடையூறுகளால், இன்று உழவுத்தொழில் பாழ்பட்டு தாழ்பட்டுப் பாதிஉயிராய்ப் பரிதாபன நிலையில் உள்ளது.

 

                ஆளும் அரசுகளும், யானைக்குச் சோளப்பொரி காட்டுவது போல பல்வேறு நலதிட்டங்களை அறிவித்தாலும், பாதி அளவுகூடஉழவர்களைச் சென்று சேர்வதில்லை, வணிகர்கள் உற்பத்தியாளர்கள் போன்றவர்கள் உழவர்கள் உழைப்பை உறுஞ்சி வாழ்கின்றார்கள். விளைவிக்கும் பொருள்களுக்கு விலைவைக்கும் உரிமையும்கூட உழவர்க்கு இல்லை.

 

                இத்தகைய இடர்பாடுகள் இந்தியா வெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் உழவுத் தொழில் பக்கம் உணர்வோடு மேலும் மேலும் நாட்டம் செலுத்துவோர் அருகிவிட்டனர் எதிர்காலம் உதிர்காலம் போல் தோன்றுகிறதே என்செய்வோம்! வள்ளுவர் புகழ்ந்த உழவுக் கலை நம் காலத்தில் நாளும் நாளும் இகழும் கலையாக நலிந்து வருகிறது என்பதை மறுக்கமுடியுமா?

 

 

முடிவுரை:

 

                உழுதல் முதலிய செயல்களைச் செய்து நிற்கின்ற உழவர்களுக்குப் பலவிதச் செல்வங்களையும் கொடுத்து வருகின்ற நிலம் என்னும் செல்வியானவள் அது பார்த்திருந்தும் அத்தொழில்களைச் செய்யாது வறுமையடைகின்ற பேதையரைக்கண்டால் சிரிப்பாள் என்றும் இக்குறள்வழி உணர்கிறோம். அதாவது உழவன் ஒருவன் தன் தொழிலைச் சரியாகச் செய்யாதவிடத்து வறுமையடைவானே அன்றிச் செய்தவிடத்து எல்லாச் செல்வமும் அடைவான் என்பதைப் புரிந்து கொள்கிறோம். இதனை மேலும் புரிந்துகொள்ளல் அடுத்துவரும் நல்குரவு என்னும் அதிகாரத்திலும் நம் தெய்வப்புலவர் தொடர்கின்றார்.

 

                ஆகவே, மேழிச் செல்வம் கோழைப்படாது என்பதும் தொழுதூண் சுவையின் உழுதூண் சுவையே இனிது என்பதும் கம்பரின் ஏர் எழுவது பாடல்கள் வாயிலாகவும் பழமொழிகள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

 

 

 

 

குறள்முரசு மாதி. சி. குப்பன்

 

பேசி; 0091-94860 46231

 


 


Home

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved