Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

   
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கட்டுரைகள்

 

பேச்சுக்கலை

 

 

                 ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று கலைக்கு  கவிஞன் தானறிந்த அளவில் ஓர் எல்லை வகுத்துள்ளான். ஆனால் இன்றைய காலத்திற்கு அது பொருந்தாது. ஏனெனில் மக்களோ உயிர்ப்புள்ளவர்கள் உணர்வுகளால் உந்தப் படுபவர்கள் உலகம் முழுவதும் சுற்றிடும் வாய்ப்புப் பெற்றவர்கள் பல்வேறு மொழி இனம் சமயம் பண்பாட்டில் திளைப்பவர்கள் பல்வகைச் சூழல்களால் பருவத்தால் இடத்தால் உருவத்தால் பழக்க வழக்கத்தால் வேறுபட்டுள்ளவர்கள் இத்தகு தாக்கங்களால் கலைகள் ஓர்எல்லைக்குள் அடங்குதல் என்பது கார்மேகத்தைக் கையில் பிடித்து விடுவோம் என்பதற்கு ஒப்பாகும். சான்றுக்கு வளர்ந்துள்ள கலைகளுள் ஒன்றான கணினிக்கலையே காட்டிடலாம். அதன் உட்பிரிவில் ஒன்றான அலைபேசி (செல்பேசி) வழி - படித்தவர் பாமரர் முதலாளி தொழிலாளி இளஞ்சிறார்கள் என எண்ணற்றவர்கள் இன்று   பல்வேறு வகையில் நாள்முழுவதும் பேசி வருவதும் ஒரு கலையில் சேர்த்திடலாம் அல்லவா! ஆகவே பல்வேறு கலைகளின் இடையில் பேச்சுக் கலைக்குத் தனிச் சிறப்புண்டு. அதுபற்றியே இக்கட்டுரை தொடர்கிறது.

 

மொழி:

                                எம்மொழியும் செம்மொழியானால் இருவடிவம் இனிதே பெறும். ஒன்று ஒலிவடிவம் மற்றொன்று வரி வடிவம் ஆகும். வாழ்க்கையில் ஒலிவடிவமான பேச்சே பெரும்பான்மையாகப் பயன்படுகின்றது. கற்றவர்களும் கல்லாதவர்களும் இளைஞர்களும் முதியவர்களும் தத்தம் மனக்கருத்தை வெகு விரைவில் எளிதில் பிறருக்குப் புலப்படுத்துதற்குப் பேச்சே பெருந்துணையாகும்.

 

பேச்சும் மூச்சும்:

                                                                பேச்சும் மூச்சும் பிறப்புமுதல் இறப்புவரை விடாமல் தொடர்வது உடன் இருப்பது  மூச்சு நம் கட்டுப்பாட்டில் முற்றும் அடங்காதது. ஆனால் பேச்சோ நம் கட்டுப்பாட்டிற்குள் அடங்குவது  கள்ளுண்டோரும் கழிசினங்கொண்டோரும் இதற்கு விதிவிலக்காகலாம். மூச்சின் இயக்கம் மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதை மட்டும் உணர்த்தும் ஆனால் பேச்சோ இவன் இத்தகையவன் என்பதை அடையாளம் காட்டி விடும் வாழும் மாந்தர்க்கு இவை இரண்டும் தேவை. அதிலும் பேச்சில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

 

வாயில்லா உயிரினம்:

                                                                                 வாய் செய்யும் செயல்கள் இரண்டு. ஒன்று உள்ளே வாங்கும் செயல் அஃது உணவைக் கொள்ளல் மற்றொன்று வெளியே விடுதல் அஃது ஒலித்தல். உணவு உட்கொள்ளுதலின் நோக்கம் உடலைப் பேணல் ஒலித்துப் பேசுதலின் நோக்கம் உணர்வை வெளிப்படுத்தல். இவ்விரண்டையும் பிற உயிரினங்களும் செய்கின்றன. செய்தும் வாயில்லாப் பிராணிகள் என்னும் பட்டத்தைத்தான் உலகில் அவை பெற்றுள்ளன.

 

வாயுள்ள பிள்ளை:

                              மனிதன் உண்பதிலும் பேசுவதிலும் தேர்ந்தவன். எனினும் இரண்டுள்ளும் பேச அறிந்ததாலேயே மற்றைய உயிரினங்களைவிட அவன் மேம்பட்ட உயிரினமாக விளங்குகின்றான். மன உணர்வை பகுத்தறிவை வழிகாட்டுதல்களை வெளிப்படுத்தும் வாய்ப் பேச்சால்தான் அவன் ஆறு அறிவுடைய மாந்தன் ஆனான். அவன் வாய் உறுப்புகளை முழுமையாகப் பயன்படுத்தியதால்தான் வாயுள்ளவன் ஆனான். ஒருவனது குடியின் பெருமையும் அதன் பண்பையும் அவனது வாயிலிருந்து வரும் சொல்லே காட்டும் என்பது நம் தெய்வப்புலவர் தெரிவிக்கும் செய்தி நல்ல வளமான நிலத்தின் தன்மையையூம் அதில் பதிந்த வித்தின் வளத்தையும் முளைக்கும் முளையினையும் காட்டி நல்ல உவமையுடன் இதனை நமக்குப் புலப்படுத்துகின்றார்

 

                நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

                குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் - (959)

 

மேலும் வாய் உணவு மட்டுமே பெற்றவரை மாக்கள் என்றும் அத்தகையோர் அவியினும் வாழினும் என்! என்றும் வெறுத்துப் பேசுகிறார் மேலும்

 

                நுணங்கிய கேள்வியா  அல்லார் வணங்கிய

                வாயினர் ஆதல் அரிது – (419) என்கிறார்

 

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்னும் பழமொழியும் இதனை விளக்கும்.

 

தாயும் சேயும்

                        சொல்லுக்குத் தாயான வாய் தான் மட்டுமன்றித் தன் குழந்தைகளையும் சொல்லுக்காக நிற்கவைத்துள்ளது. வாய் என்னும் தாயின் சேய்கள் நா பல் உதடு அண்ணம் முதலியன. சொல்லைக் குறிக்க வாய் என்னும் சொல் அமைகின்றது.

 

                சான்று

                                  வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.பழமொழி

                                  வணங்கிய வாயினர் ஆதல் அரிது. (419)

               

இங்கு வாயின் உறுப்புகளும் ஆகுபெயராகிச் சொல்லைக் குறிக்கிறது.

 

அதனால் வாயும் சொல்லும் இணைந்து வல்லமையோடு உணர்வுகள் வெளிப்படுத்துவதை நாவன்மை என்று நாடு புகழ்ந்து போற்றுகிறது.

 

இந்த நாவன்மையினை மிகச்சிறப்பாக சொல்வன்மை அவை அறிதல் அவை அஞ்சாமை இனியவை கூறல் அடக்கமுடைமை பயனில சொல்லாமை என்னும் அதிகாரங்கள் வழியும் காமத்துப்பாலில் தலைவன் தலைவி கூற்றாகவும் மற்ற அதிகாரங்களில் தேவைக்கேற்ப உருக்கமாகவும் சில இடங்களில் இலைமறை காயாகவும் ஏற்றவாறு எடுத்து ஊற்றமுடன் உரைத்துள்ளார் நம் வள்ளுவப் பேராசான். அதனால்தான் அவருக்கு நாவலர் என்றும் பெருநாவலர் என்றும் சிறப்புப் பெயர் தானாய் வந்து சேர்ந்துள்ளது எனலாம்.

 

அத்தகு வித்தகர்

               

                நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

                யாநலத் துள்ளதூடம் அன்று. (641)

 

என்பதைச் சொல்வன்மை அதிகாரத்தின் முதல் குறளாக முதன்மைச் சிறப்பளிக்கும் குறளாக அமைத்துள்ளார். மக்களை நம்பால் ஈர்த்து நம் எண்ணப்படி அவர்களைச் செயற்படுத்தும் ஆற்றல் பேச்சுத்திறத்தால் மட்டுமே அமையும். அவ்வாறு மக்களைத் தம் வய்ப்படுத்தக் கூடிய சிறப்புத் தன்மை வேறெந்த செயலுக்கும் இல்லை. ஆகவேதான் பேச்சுக்கலை என்பது பெருநன்மை தரக் கூடிய தலைசிறந்த கலையாகும். இது வேறு எந்த நலத்துள் அடங்குவதொரு நலமன்று. எல்லாவற்றிலும் மேலோங்கி நிற்கும் மேன்மை மிக்கது. இந்தக்குறளில் நலம் என்றும் சொல்லை நான்கு முறை பெருநாவலர் பாங்குடன் பயன்படுத்திய திலிருந்தே இந்நலத்தின் பெருமையும் சிறப்பும் பெரிதும் விளங்குமன்றோ!

 

சொல்லழகில் சொக்கிப்போன காரியாசான் தம் கவிதைவழி சிறுபஞ்ச மூலத்தில்

               

                மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

                உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த

                பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கு இயைந்த

                சொல்லின் வனப்பே வனப்பு. (பாடல் 35)

என்று

 

பல்வகை வனப்புகளைப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டு விட்டு சொல்லின் வனப்பை மட்டும் தேற்றேகாரத்தில் புலப்படுத்திப் பெருமிதம் கொள்கிறார்.

 

ஆகவே ஆளுபவர்க்கும் தனி ஆற்றலும் தம் கருத்தைச் சொல்ல வேண்டிய அமைச்சர்களுக்கும் தூதர்களுக்கும் கலைகளைக் கற்பிக்கும் ஆசிரிர்கட்கும் கருத்துடன் கற்கும் மாணாக்கர்கட்கும் வழக்குரைஞர்கட்கும் மதச்சார்புடை அறிவுரை பகர்வோர்க்கும் கழகங்கள் (சங்கங்கள்) நடத்துவோர்க்கும் பட்டிமன்றம் வழக்காடு மன்றம் சுழலும் சொல்லரங்கம் போன்றவற்றில் பங்கேற்போர்க்கும் தொழிற்சாலை நடத்துவோர்க்கும் தொழிலாளர்களுக்கும் இன்னபிறஎல்லாத் துறையினர்க்கும் நல்ல சொல்லாற்றல் மிக மிக இன்றியமையாததாகும். எனவேதான் இதற்கு மற்றொரு உவமையாக வேறு  குறித்து எடுத்துரைத்தல் அரிது என்பதை இக்குறள்மூலம் திருவள்ளுவர் நமக்குப் புரியவைத்துள்ளார் என்போம்.

 

சோர்வுபடாமல் சொல்லல்

                  சொல்லும் போது கேட்பவர்களைத் தன் வயப்படுத்துகின்ற தகைமையுடனும் அதனைக் கேட்காதவரும் கூடக் கேட்பதற்கு விரும்புமாறு கூறப்படுவதே சொல்வன்மையாகும். அதனால் தான் இதனைப் பேச்சுக்கலை என நாம் போற்ற வோண்டியுள்ளது.

 

                கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

                வேட்ப மொழிவதாஞ் சொல் (643)

 

நம் காலத்தில் இக்குறளுக்கு இலக்கணமாய் விளங்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்களைச் சொல்லலாம். அவர் பேச்சில் அடுக்குச் சொல் மடைதிறந்த வெள்ளம் போல் வந்து பாயும் பேச்சில் எளிமை இருக்கும்  இனிமை இருக்கும்  வரலாற்றுச் செய்திகள் வாழ்க்கைக்கு ஒட்டியதாய்க் காட்டும் திறனிருக்கும்; வாழ்வுக்குப் பயனளிக்கும் வளமான குறிக்கோள் இருக்கும் வாழைப்பழத்தில் ஊசி நுழைத்தாற்போல் எதிர்க்கட்சியினரைத் தாக்கும் போக்கும் இருக்கும்  மேலும் யாரும் மனம் புண்படாதவாறு பண்பாட்டுச் சிறப்புடன் ஒளிரும் வல்லமையும் இருக்கும்  இருபாலரும் இளையவரும் படித்தவரும் பாமரரும் இன்புற்றுத் திகழும் அளவில் தம் பேச்சை அடுக்கிக்கொண்டே போய் ஒருகட்டத்தில் திடுமென்று பேச்சை முடித்துவிடுவார் அப்போது அவர்  பேச்சைக் கேட்டு யாரும் இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசியிருக்கக் கூடாதா! என்று ஏங்கும் நிலை எங்கும் ஓங்கும். சுருங்கச் சொன்னால் கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் கைகோத்துச் செல்லுமளவில் அவர் சொற்பொழிவு அமைந்திருக்கும். கேட்டாரை ஈர்க்கும் அளவிற்கும் அடுத்தமுறை அவர் எங்கு பேசினாலும் சென்று கேட்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் அளவிற்கும் அமையும். அதனால் கலைகளில் ஒன்றாய் அதனைச் சேர்ப்பது இசைவுக்குரியது தானே!

 

மெரிக்க நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கெட்டிஸ்பர்க் என்னும் போர்க்களத்திலே சுமார் 7000 தலைகள் இரத்த ஆற்றிலே உருண்டோடின. அங்கு உயிர் நீத்த தியாகிகளுக்காக ஒரு நினைவுச் சின்னம் உருவாக்கினர் . இவ்விழாவில் பேசுமாறு அங்குப் புகழ்மிக்க சொல்வேந்தரான எவரெட்டைப் பேசுமாறு வேண்டிக் கொண்டனர் அவரோ பேச்சைத் தயாராக்கி போதிய காலமில்லை என்று மறுத்து விட்டார் பின் அவருக்காகவே விழாவை ஒரு திங்கள் ஒத்திவைத்துவிட்டனர். அவர் பின்பு ஒரு மாதஅளவில்  தம் பேச்சை நன்கு தயாரித்து அவ்விழாவில் இரண்டு மணி நேரம் ஆற்றொழுக்காக அலங்காரமாக ஆவேசமாக ஆரவாரத்துடன் பேசினார் . ஆனால் அவர் பேச்சை மக்கள் அன்றே மறந்துவிட்டனர். அவ்விழாவிற்கு ஆப்ரகாம் லிங்கனை அழைக்கவில்லை. ஆனால் அவர் அவர் அழைக்கப்படாமலேயே அங்குச் சென்று கலந்து கொண்டு இரண்டு நிமிடங்கள் தான் பேசினார் அவர் பேச்சு இன்றுவரை வரலாற்றில் கெட்டிஸ்பர்க் அட்ரஸ் (பநவவளைடிரசப யவவசநளள) என்னும் பெயரில் சுடர்விட்டு ஒளிர்ந்த வண்ணமாய் உள்ளது.

 

அவர் பேசியதன் சுருக்கம் நம் மூதாதையர் இந்தக் கண்டத்திலே புதியநாட்டை விடுதலை கொண்டு உருவாக்கினர். அதை எல்லா இனமக்களும் சமமாகக்  காணிக்கையாக்கினர். இந்த நாட்டிற்கு விடுதலைப் பாதையில் புதுவாழ்வு பூக்கட்டும். மக்களால் மக்களுக்காக மக்களின் மூலம் ஆளப்படும் இந்த அரசு இவ்வுலகில் என்றுமே அழியாது என்று கூறி ஆப்ரகாம் லிங்கனார் தம்பேச்சை முடித்தார் இன்றும் கெட்டிஸ்பர்க் என்னும் பெயர் வரலாற்றில் நினைவு மாறமல் ஒளிர்கிறது. காரணம் அன்று வீரர்கள் சிந்திய இரத்தத்திற்காக அல்ல. ஆப்ரகாம் லிங்கனார் சுருங்கச் சொல்லி நிறைந்த கருத்தாழமிக்க சொற்பொழிவால்தான். அதுமட்டுமல்லாமல்  பிரிட்டிஷ்  பிரதமர் ர்ச்சில் அவர்கள் நூலுக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. அது அவர்  பேசிய பேச்சுக்களையே தொகுக்கப்பட்ட நூலன்றி எழுதப்பட்டதல்ல.

 

 நம் நாட்டிலும் விவேகானந்தர்  சத்தியமூர்த்தி சீனிவாசசாஸ்திரிர். கே.சண்முகஞ் செட்டியார் இரா.பி.சேதுப்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியார் டாக்டர். இராதாகிருஷ்ணன் போன்ற பலரையூம் அயல்நாட்டில் இட்லா;இ முசோலினிஇ சாக்கரடீஸ்இ மெக்காலே போன்ற எண்ணற்றவர்களையும் சொல்லாற்றல் மிக்கவர்களுக்குச் சான்று காட்டலாம். இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

               

                விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

                சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648)

 

என்னும் குறள்வழி முப்பாலர் முனைந்துரைத்துள்ளார்.

 

பேச்சளிக்கும் திட்டம்:

                    நாட்டின் அரசியல் பொருளாதாரம் சமூக முன்னேற்றத் திட்டங்கள் எப்படித் தேவையோ அப்படியே பேச்சளிக்கும் திட்டங்கள் தேவை. இலையில் மோர் விட்டு குழம்பு ஊற்றி அதன்பின் சோறு போட்டால் எத்தகைய குழப்பம் ஏற்படும் உண்பவனுக்கு? உணவுபறிமாறுவதிலும் ஒழுங்கு நியதியும் வேண்டும் என்பதைப்போல் பேசும் கருத்திலும் அலை மோதிக் கொண்டு ஒரே சமயம் வெளிவந்தால் குழப்பந்தானே விளையும்? ஆகவே பேசுமுன் கருத்துக்களை ஒழுங்குப் படுத்தி கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

கருத்துக்களைச் சொல்லுமிடத்து முன் சொல்ல வேண்டுவன பின் சொல்ல வேண்டுவன என்று மனத்தால் ஆராய்ந்து அறிந்து அதன்பின் அறிந்தவண்ணமே சொல்லுங்காலத்து முறையாகச் சொல்ல வேண்டும். அவ்விதம் முறையாகச் சொல்லுங்காலத்தும் கேட்பவர்களுக்கும் இன்பம் அளிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் கல்வி கேள்விகளில் வல்லவனாய் இருப்பவன் ஒருவன் சொல்வதிலும் வல்லவனாய் இருப்பான் என்று முடிவு செய்தல் கூடாது அதனாலேயே

 

     “  ர்த்தசபை நூற்றொருவர்

                                ஆயிரத் தொன்றாம் புலவர்

                வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

 

என்று நம் முன்னோர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளனர். வடநூலாரும் சொல்லுதல் வல்லவர் இலட்சத்தில் ஒருவர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

 

சிலர் பலப்பட பேசுவோமாயின் சொல்வன்மை என்று உலகோர்விரும்புவர் என்று தவறாக எண்ணிக்கொண்டு பயன்தராத சொற்களை மேலும் மேலும் சொல்லிடுவர்.

 

                பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

                சிலசொல்லத் தேற்றா தவர் (649)

 

என்னும் குறளால் சொல்லின் பயனறிந்த பெரியோர் தாம் புலப்படுத்தவேண்டிய கருத்துக்களை எல்லாம் உரிய சொற்களால் சில பொழுதிலேயே சொல்லி முடித்தல் வேண்டும் என்னும் கருத்தைப் புரியவைக்கின்றார்நம் வள்ளுவர். அவ்வாறு இல்லாதாவர்கள் பல சொல்ல விரும்புவர் அதனால் அத்தகையோர் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஆற்றல் இல்லாதவர்களாவர்.

 

தாம் கற்று பிறர்க்குச் சொல்லும் வல்லமை இல்லாதாரைத் தெய்வப் புலவர்

               

                இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து)

                உணர விரித்துரையா தார் (650)

 

  என்று குறிப்பிட்டுள்ளார் அதாவது பார்ப்பவர் கண்களுக்கு அழகு தரும்படி பூக்களானவை மலர்ந்திருந்தும் அப்பூக்கள் வாசனை இல்லாவிடின் அவற்றை எவரும் பயன்படுத்திக் கொள்ளாததுபோல் நூல்களை எவ்வளவு படித்திருப்பினும் அவற்றைச் சொல்லும் வன்மை இல்லாதவரை உலகோர்மதியார்என்றும் அவர் கற்றது அவருக்கும் பிறருக்கும் பயன்படாது என்றும் கூறுகின்றார்.

 

ஆழ்ந்து கல்வி கற்றும் அருமையாகப் புலமை பெற்றும் அற்புதமாக எழுதும் வல்லமையூற்றுங்கூட சொற்பொழிவாற்ற முடியாது தவிக்கும் பலர் நாட்டில் உள்ளனர். அவரிடம் பேச்சுக்கலை என்னும் சிறப்பில்லாததால் வாசம் வீசா மலர்கள் என்று அவர்களை இகழ்கின்றார் ஆகவே அவர்களும் தாம் கற்றதைக் கேட்போர்க்குத் தெளிவுபட விரித்து உரைத்தல் வேண்டும் என்ற உந்துதலை உணர்வினை ஊக்கத்தினைப் பெறுதல் வேண்டும் அதனால் அவர்கள் மதிப்புமிக்க மணம் வீசும் மலர்களாக மதிக்கப்பட வேண்டுமனால் பேச்சுக் கலையை நாளும் நல்லவண்ணம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

செந்நாப்புலவர்  

                            சொல் என்னும் சொல்லை ஐந்து முறை கையாண்டு குறிப்பிட்டுள்ள குறள்கள் இரண்டினைச் சற்றே நோக்குவோம்.

                               

                                சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

                                சொல்லில் பயனிலாச் சொல் (200)

 

                                சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

                                வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645)

 

                முன்னது பயனில சொல்லாமை யை வலியூறுத்துவது. பின்னது பகைவர்களாலும் வாதிடுபவர்களாலும் வெல்ல முடியாத சொல்லைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும் என்பதைக் கூறுவது.

               

                இவ்விரு பாடல்களிலும் பயின்றுள்ள எல்லாச் சொற்களும் எளியசொற்களாகவும் இனிய சொற்களாகவும் வெல்லும் சொற்களாகவும் உள்ளன. இதுவும் சொற்களைக் கையாள்வதில் ஒரு கலையாகும் அன்றோ!

 

                                ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்

                                காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு (642)

 

                என்பது மாந்தர்க்குத் தெய்வப்புலவர் தரும் மாபெரும் எச்சரிக்கை ஆகும். சோர்விலாச் சொற்களின் கரு வாழு! வாழவிடு!! என்பதாகும் அதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்இ காக்கவும் முடியும்.

 

                அதனால்தான்

 

                                யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

                                கோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

 

                நாவை முறையே செயற்படுமாறு காத்துக்கொள்ள வேண்டும். தவறின் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பற நேரும் எனிறு எச்சரிக்கையும் செய்கிறார் அவர்.

 

                உணவோடு சேர்த்துப் பார்ப்பவரை உணர்வோடு சேர்த்துப் பார்த்துச் சிந்தனை செய்யும் வகையில் நாநலம் நடைபோடுகிறது. நச்சுப் பேச்சுக்கு முறிவைச் சொல்லி நாகரிகம் காக்கும் வகையில் நாக்கு நாகரிகம் நடைபயில்கிறது. நல்வழியும் நமக்குக் காட்டுகின்றது.

 

முடிவுரை:

                      திருக்குறள் ஒரு முப்பால்  மனிதனும் ஒரு முப்பால்  திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பகுப்புடையது. மனிதன் சிந்தனை சொல் செயல் என்னும் முப்பகுப்புடையவன்.

 

                இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்க்கூறு  மனிதனின் உள்ளம் உரை ஒழுக்கம் என்ற முக்கூற்றோடு மெத்தத் தொடர்புடையது. இம்முக்கூற்றின் சிந்தனை சொல் செயல் காட்டுவது இதுவே அவனைப் பிற உயிர்களிலும் வேறுபட்டபேறு பெற்றவனாகவும் விளங்கச் செய்வது.

 

                சிந்தனை சொல் செயல் என்ற மூன்றுள்ளும் சிந்தனை அகமாய் மாமலர் மணமாய் உள்ளார்ந்து இருப்பது சொல்லும் செயலுமோ புறமாய் வெளிப்பட்டு அரும்பாய் மலராய் மலர்வது மணப்பது.

 

                எனவே சொல் இல்லையேல் சிந்தனைக்குச் சிறப்பில்லை பயனில்லை வரலாறில்லை வாழ்வில்லை அதுமட்டுமல்ல சொல் இல்லையேல் செயல்களும் சிறப்பதில்லை. செய்திகளும் முறையே சென்று சோர்வதில்லை. ஏன்? எண்ணங்களும் நல்ல வண்ணம் பெறுவதில்லை. ஏற்றங்களும் தோற்றங்களும் தெளிவாய்த் தெரிவதில்லை.

 

                ஆகவே சொல் என்பது ஓர் ஆட்டிப் படைக்கும் ஆற்றலுடைய கருவி. அதனை முறையே பயன்படுத்துவதும் ஓர்கலை. அக்கலை எல்லாக்கலையைவிட மனிதனின் வாழ்வில் கருவிலிருந்து கல்லறை வரை நீக்கமற நீள்பயனை அளிக்கவல்லது.

 

வேலூர்   குறளேந்தி

 

பேசி: 0091-98947 03577

 


 


Home

 

copyright © 2010 kanavy.com. All rights reserved